Published : 28 Jan 2025 01:35 PM
Last Updated : 28 Jan 2025 01:35 PM

சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: மோடியுடன் விவாதித்து வருவதாக ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரம் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், ‘இந்தியாவுடன் தங்களுக்கு நல்ல உறவு உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஆண்ட்ரூஸுக்குத் திரும்பும் வழியில் டொனால்டு ட்ரம்ப் நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இன்று (திங்கட்கிழமை) காலை பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது.” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்களை அழைத்துச் செல்ல மோடி ஒப்புக்கொண்டாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “அவர் (மோடி) சரியானதைச் செய்வார். நாங்கள் விவாதித்து வருகிறோம்.” என்று கூறினார்.

பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடலின் விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “(மோடியுடனான தொலைபேசி உரையாடலில்) அனைத்தும் வந்தது” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ட்ரம்ப் - மோடி தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர். இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உட்பட பல்வேறு பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்தியா, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை நோக்கி நகர்வதன் முக்கியத்துவத்தையும் அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இது நமது நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் உறவுகளின் வலிமையை உணர்த்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் 2.0 ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணமாக இந்த பயணம் இருக்கும். அதிபராக ட்ரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் மேற்கொண்ட கடைசி வெளிநாட்டுப் பயணம், அவர் இந்தியாவிற்குச் சென்றது. இரு தலைவர்களுக்கும் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது. 2024 நவம்பரில் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவருடன் பேசிய முதல் மூன்று உலகத் தலைவர்களில் மோடியும் ஒருவர். இருவரும் கடந்த 2019 செப்டம்பரில் ஹூஸ்டனில் நடந்த இரண்டு வெவ்வேறு பேரணிகளிலும் கலந்து கொண்டனர். 2020 பிப்ரவரியில் அகமதாபாத்திலும் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பேரணிகளிலும் இருவரும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "வர்த்தகம் மற்றும் குடியேற்றம் தொடர்பான விஷயங்களில் இந்தியா அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினரும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும். வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-அமெரிக்க உறவில் வர்த்தகம் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இரு தரப்பினரும் 190 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளில் சாதனை அளவிலான வர்த்தகத்தை எட்டியுள்ளனர்" என்று கூறினார்.

ஜனவரி 23 அன்று, ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம், அமெரிக்காவில், சுமார் 1,80,000 இந்தியர்கள் ஆவணமின்றி அல்லது விசா காலம் முடிந்து தங்கி இருப்பதாகவும், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “ஒரு அரசாங்கமாக, நாங்கள் சட்டப்பூர்வ இடப்பெயர்ச்சியை மிகவும் ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், சட்டவிரோத இடப்பெயர்ச்சி மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை நாங்கள் மிகவும் உறுதியாக எதிர்க்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும், எங்கள் குடிமக்களில் யாராவது சட்டவிரோதமாக அங்கு இருந்தால், அவர்கள் எங்கள் குடிமக்கள் என்று எங்களுக்கு உறுதியாகத் தெரிந்தால், அவர்கள் இந்தியாவுக்கு சட்டப்பூர்வமாகத் திரும்புவதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருக்கிறோம்.” என குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x