Published : 28 Jan 2025 05:30 AM
Last Updated : 28 Jan 2025 05:30 AM
புதுடெல்லி: அமெரிக்க அதிபராக 2-வது முறை பதவியேற்றுள்ள ட்ரம்புக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கடந்த 2017 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அப்போது அவருக்கும். இந்திய பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்புறவு நீடித்தது. சர்வதேச அரங்கில் ஒருமித்து செயல்பட்டனர். கடந்த 20-ம் தேதி ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இந்த விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
தற்போதைய நிலையில் அதிபர் ட்ரம்பின் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் நரேந்திர மோடி (இந்தியா), பெஞ்சமின் நெதன்யாகு (இஸ்ரேல்), ஜார்ஜியா மெலோனி (இத்தாலி), விக்டர் ஓர்பன் (ஹங்கேரி), சேவியர் மிலே (அர்ஜென்டினா) ஆகிய 5 பிரதமர்கள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசியில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதுகாப்பு, விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசித்தனர்.
இதுகுறித்து சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: எனது நண்பரும், அமெரிக்க அதிபருமான ட்ரம்புடன் தொலைபேசியில் பேசினேன். 2-வது முறை அதிபராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். இருநாடுகள் இடையே நம்பிக்கையான உறவு நீடிக்கிறது. இந்த உறவை வலுப்படுத்தவும், இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக செயல்படவும் உறுதி மேற்கொண்டோம்.
இரு நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபடுவோம். உலக அமைதி, வளம். பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment