Last Updated : 06 Jul, 2018 04:34 PM

 

Published : 06 Jul 2018 04:34 PM
Last Updated : 06 Jul 2018 04:34 PM

‘‘முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது’’ - மலேசியா பிரதமர் திட்டவட்டம்

முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் அவரால் எந்தவிதத்திலும் எங்களுக்குத் தொந்தரவு இல்லை என்று மலேசியா பிரதமர் மகாதிர் முகம்மது திட்டவட்டமாக இன்று அறிவித்துவிட்டார்.

தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் ஜாகீர் நாயக் மீது இந்திய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) குற்றம்சாட்டித் தேடிவந்தது. மலேசியாவில் இருக்கும் ஜாகீர்நாயக்கை நாடுகடத்த வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதை மலேசிய அரசு நிராகரித்துள்ளது.

முஸ்லிம் மத போதகர் ஜாகீர் நாயக் மீது வெறுப்பைத் தூண்டும் பேச்சு, சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜாகீர் நாயக் மீது வழக்குப் பதிவு செய்தது. அதில் இரு மதக்குழுக்களுக்கு இடையே விரோதத்தை வளர்த்தல் என்ற பிரிவின் கீழ் அவரைத் தேடி வந்தது.

ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மலேசியாவில் ஜாகீர் நாயக் வசித்து வருகிறார். மும்பையில் உள்ள அவருக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ தேடுதல் நடத்தினார்கள். இந்தியாவில் உள்ள ஜாகீர் நாயக் அமைப்புக்கு பணம் வருவதையும் உள்துறை அமைச்சகம் முடக்கியது. மேலும், தீவிரவாதச் செயலுக்கு உதவுவதாகக் குற்றம் சாட்டியது.

இதனால், ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதை ஏற்க மறுத்த இன்டர்போல், எந்த நீதிமன்றத்திலும் ஜாகீர்நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், ஜாகீர் நாயக் மும்பைக்கு வருகிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் இந்தச் செய்தியை மறுத்த ஜாகீர்நாயக் ''மலேசியாவில் இருந்து நான் இந்தியாவுக்கு இன்று வருகிறேன் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை முற்றிலும் தவறானவை. இந்தியாவுக்கு வருவது குறித்து என்னிடம் இப்போது எந்தத் திட்டமும் இல்லை.

என் மீதான குற்றச்சாட்டுக்கு நியாயமான விசாரணை நடக்கும், பாதுகாப்பாக இருப்பேன் என்ற உணர்வு வரும்போது இந்தியா வருவேன். இப்போதுள்ள நிலையில் நியாயமான விசாரணையும், பாதுகாப்பும் கிடைக்கும் என உணரவில்லை'' என்று தெரிவித்தார்.

இருப்பினும், இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே கைதிகளையும், குற்றம்சாட்டப்பட்டவர்களையும் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்த செய்யப்பட்டு இருப்பதால், அதன்படி ஜாகீர் நாயக்கை நாடு கடத்தும்படி, ஜனவரி மாதம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மீண்டும் மத்தியஅரசு சார்பில் மலேசிய அரசிடம் ஜாகீர்நாயக்கை இந்தியா அனுப்பக்கோரி மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோலாலம்பூர் அருகே இருக்கும் புத்ராஜெயாவில் மலேசியா பிரதமர் மகாதிர் முகமது நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்புவீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கால் எந்தவிதமான தொந்தரவும், பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். மலேசியா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கிறார் ஜாகீர் நாயக். ஆதலால், இந்தியாவுக்கு ஜாகீர் நாயக்கை திருப்பி அனுப்பமாட்டோம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x