Published : 01 Jul 2018 07:48 PM
Last Updated : 01 Jul 2018 07:48 PM
தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், அணியின் உதவிப் பயிற்சியாளரும் ஒரு குகைக்குள் சென்று சிக்கிக்கொண்டனர். மழை கடுமையாக பெய்ததால், 8-வது நாளாக குகையில் இருந்து வெளியேவரமுடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ நீளம் உடையதாகும். இந்தக் குகைக்குள் கடந்த வாரம் 11வயது முதல் 16-வயதுவரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப்பயிற்சியாளரும் சென்றார்.
ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்குப்பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குகையைவிட்டு வெளியேற முடியவில்லை. குகைப்பகுதி முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்தச் சிறுவர்களையும், அணியைக் காணாமல் பல்வேறு இடங்களில் அணி நிர்வாகம் தேடியுள்ளது. இறுதியில் இந்த குகைப்பகுதி அருகே சிறுவர்களின் பைகள், சைக்கிள்கள், உடைகள் இருந்தன.
இதையடுத்து சிறுவர்கள் குகைக்குள் சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், அதன்பின் குகைக்குள் தேடுதல் பணி நடத்தாத அளவுக்கு மழை பெய்துவருகிறது. இந்தக் குகை அமைந்திருக்கும் நகரம் மியான்மர், லாவோஸ் நாடுகள் அமைந்திருக்கும் பகுதியாகும். அங்குப் பருவமழை தீவிரமடைந்து பெய்துவருவதால், அங்கு மீட்புப்பணியை மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கடந்த 8 நாட்களாகக் குகைக்குள் சிக்கி இ ருக்கும் அந்த 12 சிறுவர்கள், அவர்களின் துணை பயிற்சியாளர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்கிற விவரம் ஏதும் தெரியவில்லை.
இந்த செய்தி தாய்லாந்து நாட்டின் அனைத்து நாளேடுகளிலும் கடந்த 7 நாட்களாக முதல்பக்கத்தை அலங்கரித்துவிட்டன. சர்வதேச முக்கியத்துவத்தையும் பெற்ருவிட்டதால், உலக நாடுகள் உதவி கரம்நீட்டியுள்ளன.
இதற்கிடையே கடந்த ஒருவாரமாக பெய்தமழை ஓய்ந்து, இன்று காலை முதல் வெயில்அடிக்கத் தொடங்கி இருப்பதால், மீட்புப்பணியை விரைவுப்படுத்தியுள்ளனர். குகை 10 கி.மீ நீளம் என்பதால், நீண்டதொலைவுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் வீரர்கள் நீந்த முடியாது என்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். குகைக்குள் 2 அல்லது 3 கிமீ. தொலைவில்தான் சிறுவர்கள் சிக்கி இருக்கக் கூடும் என்று மீட்புப்படையினர் நம்புகின்றனர்.
மீட்புப்பணி நடப்பது குறித்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் நோபார்ட் காத்தாங்வோங் கூறுகையில், கடந்த ஒரு வாரத்துக்குப் பின் இப்போது மீட்புப்பணி மீண்டும் நடப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. மழை நின்றுவிட்டது. மீட்புப்பணியினரும் குகைக்குள் செல்லும் வழியைக் கண்டுபிடித்துவிட்டதால், எனக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த குகைக்குள் செல்லும் ஸ்கூபா டைவிங் வீரர் நாரித்தார்ன் நா பாங்சாங் கூறுகையில், இந்தக் குகைக்குள் இருக்கும் தண்ணீரால் நீச்சல் அடிப்பதற்குக்கூட ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. சிறுவர்களை முழுமையாகத் தேட ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம் எனத் தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டுக்கு உதவ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கடற்படை வீரர்கள், கடலில் தேடுதல் வேட்டையில்சிறப்பு வல்லுனத்துவம் பெற்ற வீரர்கள் எனப் பலரும் வந்துள்ளனர். இதனால், ஏற்குறைய ஆயிரம் பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து தாய்லாந்து அதிகாரிகள் கூறுகையில் தாம் லாங் குகை தாய்லாந்து நாட்டின் மிகநீண்ட குகை, மிகவும் கடினமானது. உள்ளே சென்றுவிட்டால், மீண்டும் வந்த பாதையை அடையாளம் கண்டுவருவது கடினமாகும். இந்தக் குகைக்கு அடிக்கடி இந்த சிறுவர்கள் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள். தேடுதல் வேட்டையில் அவர்கள் கிடைத்துவிடுவார்கள் என நம்புகிறோம். குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மிகப்பெரிய ராட்சத நீர்உறிஞ்சி பம்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT