Published : 15 Jan 2025 08:09 AM
Last Updated : 15 Jan 2025 08:09 AM

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும்: இந்தியா மீண்டும் கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார்.

“ரஷ்ய நாட்டு ராணுவத்தில் பணியில் இருந்த கேரளவைச் சேர்ந்த இந்தியர் உயிரிழந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இந்தியர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி உள்ளது. இயன்ற வரையில் அவர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளும் வழங்கப்படும்.

இறந்தவரின் உடலை விரைந்து தாயகம் கொண்டு வரும் நோக்கில் ரஷ்ய தரப்பு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். காயமடைந்து சிகிச்சையில் உள்ள நபரையும் இந்தியா அனுப்ப வேண்டும் என கோரியுள்ளோம். இதை மாஸ்கோ நகரில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் மற்றும் புதுடெல்லியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.

மேலும், ரஷ்ய ராணுவத்தில் பணியில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என ரஷ்யா வசம் நாங்கள் மீண்டும் கோரியுள்ளோம்” என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரந்தீர் ஜெய்ஸ்வால் தன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022-ல் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையில் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

ராணுவத்துக்கு உதவியாளர் என சொல்லி அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் மோசடியும் நடந்துள்ளது. ரஷ்யாவில் சிக்கிய சிலரை இந்தியா விடுவித்து, தாயகம் அழைத்து வந்தது. இருப்பினும் அங்கு இந்தியர்கள் சிலர் இன்னும் பணியில் இருப்பதாக தகவல். அந்த நாட்டு ராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றும் தகவல் கடந்த ஆண்டு தெரியவந்தது.

— Randhir Jaiswal (@MEAIndia) January 14, 2025

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x