Published : 13 Jan 2025 08:46 AM
Last Updated : 13 Jan 2025 08:46 AM
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ உருவானது குறித்தும், அது வேகமாக பரவியது குறித்தும் பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீ மளமளவென 50,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. இதில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்திருக்கிறது. சுமார் 7,500 தீயணைப்பு வீரர்கள், ஏராளமான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தண்ணீர் பற்றாக்குறை, தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறை, காற்றின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தீயை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. ஏராளமானோர் தீக்காயம் அடைந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
ஒரு வாரமாகியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மலை சார்ந்த பகுதியாகும். இந்த மலைப் பகுதிகளில் வீடுகள் இல்லாத நடோடிகள் பலர் வசிக்கின்றனர். தற்போது குளிர் காலம் என்பதால் அவர்களில் யாராவது வெப்பத்துக்காக தீமூட்டி இருக்கலாம். அந்த தீ காட்டுத் தீயாக பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் வனப் பகுதியில் புதைவடமாகவும் உயர் கோபுரங்கள் மூலமும் உயர்அழுத்த மின்சார கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மின் கசிவு ஏற்பட்டு காட்டுத் தீயாக உருவாகி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். கடந்த 2022-ம் ஆண்டு முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லை. இதனால் பைன் மரங்கள், செடி, கொடிகள் பட்டுப் போயிருந்தன. இது காட்டுத் தீ அதிவேகமாக பரவியதற்கு முக்கிய காரணம் ஆகும்.
சுமார் 200 மைல் தொலைவில் கிரேட் பேசின் பாலைவனம் அமைந்துள்ளது. அங்கிருந்து வரும் வறண்ட காற்று தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை கடந்து செல்கிறது. இந்த காற்று வழக்கத்தைவிட அதிவேகமாக சுமார் 80 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. இதுவும் காட்டுத் தீ வியாபித்து பரவியதற்கு முக்கிய காரணமாகும்.
இதுவரை சுமார் 13,000-க்கும் மேற்பட்ட பெரிய கட்டிடங்கள் நாசமாகி உள்ளன. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்துள்ளன. சுமார் ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
காட்டுத் தீயை அணைக்க கனடா, மெக்சிகோ நாடுகள் உதவிக் கரம் நீட்டி உள்ளன. அமெரிக்க அரசின் ஒட்டுமொத்த கவனமும் லாஸ் ஏஞ்சல்ஸ் மீது திரும்பியிருக்கிறது. இதன் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
திடீர் மழை பெய்ய வேண்டும். காற்றின் வேகம் குறைய வேண்டும். அப்போதுதான் தீயை கட்டுப்படுத்த முடியும். இப்போதைய நிலையில் காற்றின் வேகம் குறைய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் கூறியிருக்கிறது. இயற்கை ஒத்துழைப்பு அளித்தால் தீயை விரைவாக அணைப்போம் என்று அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி பொதுமக்கள் கூறும்போது, “காட்டுத் தீயால் எரிந்த வீடுகளுக்கு காப்பீடு நிறுவனங்களிடம் இழப்பீடு கோரி விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் வீட்டின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு தொகை மட்டுமே கிடைக்கும் நிலை இருக்கிறது.
காட்டுத் தீயை அணைக்க தண்ணீர் தேவைப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பரவல் மென்மேலும் மோசமாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...