Published : 09 Jan 2025 03:42 PM
Last Updated : 09 Jan 2025 03:42 PM

ஆப்கனின் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது: தலிபான் அரசு

இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ஆப்கனிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத் துறை அமைச்சர் மவுல்வி அமிர் கான் முட்டாகியுடன் நடத்திய பேச்சுவார்த்தை.

காபூல்: ஆப்கனிஸ்தானின் குறிப்பிடத்தக்க பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு ஆப்கனிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, இந்தியா உட்பட எந்த வெளிநாட்டு அரசும் தலிபான் நிர்வாகத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில், இந்தியா உட்பட பல நாடுகள் சிறிய அளவிலான தொடர்புகளை பராமரிப்பதற்கு ஏற்ப தூதரகங்களை இயக்கி வருகின்றன. இதன்மூலம், வர்த்தகம், உதவி, மருத்துவ உதவி போன்றவை எளிதாக்கப்படுகின்றன. தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, ஆப்கனிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத் துறை அமைச்சர் மவுல்வி அமிர் கான் முட்டாகியை துபாயில் நேற்று (ஜன.8) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2021-ம் ஆண்டு ஆப்கனிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டுடன் இந்தியா நடத்திய முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையாக இது பார்க்கப்படுகிறது.

ஆப்கனிஸ்தானுடனான உறவுகளை விரிவுபடுத்துவது மற்றும் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகம் மூலம் வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஆப்கனிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாடர் துறைமுகங்களைத் தவிர்ப்பதற்காக, இந்தியா இந்த துறைமுகத்தை உருவாக்கி வருகிறது.

"ஆப்கானிஸ்தானின் சமநிலையான மற்றும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க, இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை ஆப்கனிஸ்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க பிராந்திய மற்றும் பொருளாதார கூடாளியா இந்தியாவை ஆப்கனிஸ்தான் பார்க்கிறது" என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

துபாய் கூட்டத்துக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுவதையும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதையும் இந்தியா பரிசீலித்து வருவதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க தயாராக இருப்பதாக சீனா மற்றும் ரஷ்யா தெரிவித்துள்ளன. இந்தியா - ஆப்கனிஸ்தான் இடையேயான உயர்மட்ட சந்திப்பு பாகிஸ்தானை மேலும் பலவீனமாக்கும் என கருதப்படுகிறது. பாகிஸ்தான் உடனான ஆப்கனிஸ்தானின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தனது நாட்டில் நடந்த பல போராளித் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தொடங்கப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை தலிபான்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் ஆப்கானிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை கண்டித்து, இந்த வார தொடக்கத்தில் இந்திய வெளியுறவு அலுவலகம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x