Published : 08 Jan 2025 12:48 PM
Last Updated : 08 Jan 2025 12:48 PM
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக வரும் 20-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகமே வெடித்துவிடும்" என்று எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (ஜனவரி 7, 2025) எச்சரித்தார்.
ஃப்ளோரிடா மாகாணத்தின் மார் அ லாகோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், "ஜனவரி 20ம் தேதிக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது ஹமாஸுக்கு நல்லதாக இருக்காது, உண்மையில் யாருக்கும் நல்லதாக இருக்காது. அனைத்து நரகமும் வெடித்துவிடும். இனி நான் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் அதுதான். அவர்கள் நீண்ட காலத்திற்கு பணயக்கைதிகளை விடுவித்திருக்க வேண்டும். அக்டோபர் 7 (2022) இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடந்தியிருக்கக் கூடாது. அந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், மக்கள் அதை மறந்துவிடுகிறார்கள்.
இனி அவர்கள் பணயக்கைதிகள் அல்ல. இஸ்ரேலில் இருந்து வருபவர்கள், என்னிடம் கெஞ்சுகிறார்கள். எனது மகனின் உடலை நான் திரும்பப் பெற முடியுமா? மகளின் உடலை நான் திரும்பப் பெற முடியுமா? என்று அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்த அழகான பெண், அவளை ஹமாஸ் அமைப்பினர் உருளைக்கிழங்கு மூட்டை போல காரில் வீசினார்கள். அவளுக்கு என்ன ஆனது என்று நான் கேட்டதற்கு, அவள் இறந்துவிட்டாள் என்றார்கள். அவளக்கு 19, 20 வயது உள்ள அழகான பெண் அவள். பேச்சுவார்த்தையை நான் காயப்படுத்த விரும்பவில்லை என்று சொல்கிறேன். அதேநேரத்தில், நான் பதவியேற்கும் முன் பணயக்கைதிகள் ஒப்படைக்கப்படுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும்” என்று எச்சரித்தார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க பணயக்கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தையில், மத்திய கிழக்கிற்கான ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவன் சார்லஸ் விட்காஃப் ஈடுபட்டுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் விவகாரத்தில் நாங்கள் அதன் விளிம்பில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். தாமதமாவதற்கான காரணம் பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. எந்த வகையிலும் எதிர்மறையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், அதிபரின் அந்தஸ்து, அவரது எதிர்பார்ப்பு, அவரது எச்சரிக்கை ஆகியவைதான் இந்தப் பேச்சுவார்த்தைக்கு உந்துதலாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் சில பெரிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். பதவியேற்புக்கு முன் அதிபரின் சார்பாக சில நல்ல விஷயங்களை நாங்கள் அறிவிப்போம் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகவும் நல்ல முறையில் இணைந்து செயல்படுகிறோம். எங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்; சில உயிர்களைக் காப்பாற்றுவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT