Published : 07 Jan 2025 12:14 PM
Last Updated : 07 Jan 2025 12:14 PM
புதுடெல்லி: இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது 7.1 ரிக்டராக பதிவானது. இந்நிலையில் நேபாள - திபெத் எல்லையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அது 4.5 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.
திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சீன ஊடகங்கள் தரப்பில், திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உணரப்பட்ட நில அதிர்வு: அதேபோல் டெல்லி - என்சிஆர் மற்றும் பிஹார் தலைநகர் பாட்னா, மாநிலத்தின் வட பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. அண்டை நாடான நேபாள தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீட்டை வீட்டு வெளியேறி வீதிகளில் நின்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காத்மண்டுவில் வசிக்கும் மீரா அதிகாரி என்பவர் கூறும்போது, “நான் தூங்கிக்கொண்டிருந்தேன். என் படுக்கை அசைந்தது, நான் எனது குழந்தை விளையாடுகிறது என்று நினைத்தேன். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜன்னல்கள் ஆடியதும் அது நிலநடுக்கம் என்று புரிந்து போயிற்று. உடனடியாக நான் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி திறந்த வெளியில் நின்றேன்.” என்றார்.
நிலநடுக்கத்துக்கான தேசிய மையத்தின் தகவலின் படி, முதலில் நேபாளம் - திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஜிஜாங்-கில் செவ்வாய்க்கிழமை காலை 6.35 மணிக்கு 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சக்தி வாய்ந்தது மற்றும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என கருதப்படுகிறது. அதேபோல் ஷிகாட்ஸ் நகரில் 6.8 ரிக்டர் அளவிலான நடுக்கம் பதிவானதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜிஜாங் நகரத்தில், 4.7 மற்றும் 4.9 என இரண்டு ரிக்டர் அளவில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் யூரேசியா தட்டுக்கள் மோதிக்கொள்ளும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஷிகட்ஸ் நகரைச் சுற்றி 200 கி.மீ., பரப்பளவுக்குள் ரிக்டர் அளவில் 3 அல்லது அதற்கு அதிகமான 29 நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. ஆனாலும் அவை இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட சிறியவை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT