Published : 06 Jan 2025 10:34 AM
Last Updated : 06 Jan 2025 10:34 AM

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைக்கு தனது பதவி விலகலை அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப அவர் இன்றைக்கோ அல்லது இந்த வாரத்திலோ தனது பதவி விலகலை அறிவிக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆதரவு வாபஸ்: அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துதில் இருந்தா ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துவிட்டது. ஏற்கெனவே சர்வதேச நெருக்கடிகளை ட்ரூடோ சந்தித்து வரும் நிலையில் உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

அதேபோல் கடந்த டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அவர் இன்றைக்கோ இல்லை இந்த வாரத்திலோ தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வரும் புதன்கிழமை முக்கிய கூட்டத்தை லிபரல் கட்சி கூட்டும். அதில் கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும். அந்தக் கூட்டத்தில், இடைக்கால பிரதமர் யார் என்பது பற்றியும் முடிவெடுக்கப்படும். அதன் பின்னர் ட்ரூடோ பதவி விலகலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x