Published : 31 Dec 2024 01:55 AM
Last Updated : 31 Dec 2024 01:55 AM
எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர். தலிபான் வீரர்களின் தாக்குதலில் 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் மூத்த தலைவர் முகமது ஹசன் அகுந்த் புதிய பிரதமராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்தபோது தலிபான் மூத்த தலைவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் அமெரிக்க படைகளுக்கு எதிராக தலிபான்கள் போரிட்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பதவியேற்றதும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதல் நபராக வாழ்த்து தெரிவித்தார். “அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் உடைத்தெறிந்துவிட்டனர்" என்று அவர் புகழாரம் சூட்டினார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே எல்லை பிரச்சினை பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதன்காரணமாக எல்லை பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக குற்றம் சாட்டி வரும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 24, 26 ஆகிய தேதிகளில் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாண பகுதிகளில் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 28-ம் தேதி தலிபான் வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தலிபான்கள் அங்கு அமைக்கப்பட்ட ராணுவ நிலைகளை தீ வைத்து எரித்தனர். சுமார் 19-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
தற்போது இரு நாட்டு எல்லைப் பகுதியான கோஸ்காரி, மதா சன்கர், கோட் ரகா, தாரி மெங்கல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம், தலிபான் வீரர்களுக்கு இடையே தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்லை பிரச்சினைக்கு காரணம் என்ன?- கடந்த 19-ம் நூற்றாண்டில் பிரிட்டனின் மிகப்பெரிய காலனி நாடாக இந்தியா இருந்தது. அப்போது பால்கன், மத்திய ஆசியாவில் ஆதிக்கம் செலுத்த ரஷ்ய மன்னர்களுக்கும், துருக்கியின் ஒட்டமான் பேரரசுக்கும் இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றன. இதில் ரஷ்யாவின் கை ஓங்கி வந்தது. இதன்காரணமாக ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும் பிரிட்டனின் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் இடையே ஆப்கானிஸ்தான் மட்டுமே இருந்தது.
ரஷ்ய படைகள் முன்னேறி வருவதை தடுக்க ஆப்கானிஸ்தானில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக கடந்த 1839-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டன் ராணுவம் போர் தொடுத்தது. ஆனால் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த பஸ்தூன் மன்னர், பிரிட்டன் ராணுவத்தை தோற்கடித்தார்.
கடந்த 1878-ம் ஆண்டில் மீண்டும் ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டன் ராணுவம் போர் தொடுத்தது. அப்போது பஸ்தூன் படை தோற்கடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் புதிய மன்னராக அப்துர் ரஹ்மான் கானை பிரிட்டன் நியமித்தது. இதன்பிறகு கடந்த 1893-ம் ஆண்டில் அப்போதைய பிரிட்டன் அரசின் மூத்த அதிகாரி ஹென்ரி மோர்டிமர் துரந்த், ஆப்கானிஸ்தான், ஒன்றிணைந்த இந்தியா இடையிலான 2,640 கி.மீ. தொலைவு எல்லைக் கோட்டை வரையறுத்தார். இது துரந்த் எல்லைக் கோடு என்றழைக்கப்படுகிறது.
பாகிஸ்தான் புதிய நாடான உதயமான பிறகு துரந்த் எல்லைக்கோட்டை மதிக்கவில்லை. இதேபோல தற்போதைய தலிபான் அரசும் துரந்த் எல்லைக் கோட்டை ஏற்க மறுத்து வருகிறது. இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதால் சண்டை தீவிரமடைந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT