Published : 30 Dec 2024 05:50 PM
Last Updated : 30 Dec 2024 05:50 PM
லண்டன்: காணாமல் போன 22 வயது கேரள மாணவி சான்ட்ரா சாஜூவின் உடல் ஸ்காட்லாந்தில் உள்ள ஆல்மெண்ட் ஆற்றில் (Almond River) கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் உள்ள ஹெரியட்- வாட் பல்கலைகழகத்தில் கேரளாவைச் சேர்ந்த சான்ட்ரா சாஜூ என்ற மாணவி படித்து வந்தார். இவர் கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்தவர். டிசம்பர் 6-ம் தேதி அன்று காணாமல் போனாதாக கூறப்பட்ட நிலையில், சான்ட்ரா சாஜூவின் (Santra Saju) குடும்பத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், காணாமல் போன சான்ட்ரா சாஜூவின் உடல் எடின்பர்க்கில் உள்ள நியூபிரிட்ஜ் என்ற கிராமத்தின் அருகே ஆல்மெண்ட் ஆற்றில் (Almond River) கடந்த 27-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
ஸ்காட்லாந்து போலீஸார் இது குறித்து கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை நியூபிரிட்ஜ் அருகே, ஆற்றில் சான்ட்ரா சாஜூ உடல் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்து விசாரணை அமைப்புக்கு அறிக்கை அனுப்பப்படும். அவர், கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி மாலை, லிவிங்ஸ்டன் ஆல்மண்ட்வலே உள்ள அஸ்டா சூப்பர் மார்க்கெட் கடையில் பொருட்கள் வாங்கியது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
அதன் பிறகு எப்படி அவர் உயிரிழந்தார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இந்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை என்றாலும், சாந்த்ராவின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை. அதோடு, மூன்றாம் தரப்பினரின் தொடர்பு எதுவும் இருப்பதாக சந்தேகிக்கப்படவில்லை” என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT