Published : 30 Dec 2024 03:17 AM
Last Updated : 30 Dec 2024 03:17 AM
சியோல்: தென்கொரியாவின் முவான் நகரில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமானது. அதன் பின்பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தென்கொரியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ஜேஜு ஏர் கோ நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று அதிகாலை தென்கொரியாவின் முவான் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 175 பயணிகள், விமானிகள் உட்பட 6 ஊழியர்கள் என மொத்தம் 181 பேர் இருந்தனர்.
இந்திய நேரப்படி காலை 9 மணி அளவில் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, விமானத்தின் லேண்டிங் கியர் (சக்கரங்கள்) செயல்படவில்லை. இதைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் மேலெழுந்து பறந்து, விமான நிலையத்தை சுற்றி வட்டமடித்தது. பின்னர், அவசரகால நடைமுறைப்படி, விமானத்தின் அடிப்பகுதி தரையில் படும் விதமாக ‘பெல்லி லேண்டிங்’ முறையில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
ஓடுபாதையில் விமானத்தின் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது. இதில் விமானம் தீப்பிடித்து முழுமையாக எரிந்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் பின் பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் பலர் முவான் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: விமானம் தரையிறங்கும்போது பறவைகள் மோதியுள்ளன. இதனால், லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கிறோம். தரையிறங்கியபோது இன்ஜின் பகுதியில் தீப்பிடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
இதுகுறித்து சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என மொத்தம் 1,560 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 32 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 43 நிமிடங்களுக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. 2 ஊழியர்கள் தவிர, விமானத்தில் பயணம் செய்த மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டனர். இறந்ததில் 2 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தென்கொரியாவை சேர்ந்தவர்கள். 83 பெண்கள் உயிரிழந்துள்ளனர். உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் தீயில் கருகி உள்ளன.
விமானத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு பில்லியன் டாலர் (ரூ.8,500 கோடி) இழப்பீடு கிடைக்கும். இந்த தொகையை பயணிகளின் குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்க ஜேஜு நிறுவனம் உறுதி அளித்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜேஜு விமான சேவைநிறுவன தலைவர் கிம் இ பே தெரிவித்துள்ளார். விபத்தில் உயிர் தப்பிய 2 ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியா இரங்கல்: தென்கொரியாவுக்கான இந்திய தூதர் அமித் குமார் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘விமான விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் விமான விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடுகள் காரணமா?- பாதுகாப்பு குறைபாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவின் ஏர்லைன்ஸ் நியூஸ் சமூக ஊடக ஆசிரியர் ஜெப்ரே தாமஸ் கூறும்போது, “பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் நுரை தெளித்திருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே விபத்துக்கு காரணம்” என்றார். “பறவை மோதி சக்கரம் செயலிழந்ததாக கேள்விப்பட்டதே இல்லை” என்று ஜெப்ரே டெல் என்ற நிபுணர் கூறினார். “தரையிறங்கியதும் விமானத்தின் வேகத்தை குறைக்காதது தவறு” என்று டெரவர் ஜென்சன் என்ற வல்லுநர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT