Published : 28 Dec 2024 06:58 PM
Last Updated : 28 Dec 2024 06:58 PM
காபூல்: பாகிஸ்தான் படைகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை (டிச.28) எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை ஒருங்கிணைத்த தீங்கிழைக்கும் சக்திகள், அவர்களின் ஆதரவு மையங்கள் மற்றும் மறைவிடங்களாக செயல்பட்ட புள்ளிகள் ஆகியவற்றை ஆப்கன் படைகள் குறிவைத்தன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானின் இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேர்ந்த உயிரிழப்புகள் மற்றம் சேதங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தலிபான்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் பயிற்சி மையத்தை குறிவைத்து கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.24) தாக்குதல் நடத்தியது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஊடுருவல் தொடர்பான பாகிஸ்தானின் குற்றச்சாட்டை தலிபான் அரசாங்கம் மறுத்தது. தங்கள் மண்ணில் இருந்து எந்த நாட்டுக்கும் எதிராக தாக்குதல் நடத்த யாரையும் அனுமதிப்பதில்லை என்று அந்நாட்டு அரசு கூறியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த 2021, ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, தாலிபான்களுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். புதிய தலிபான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு சர்வதேச அரங்குகளில் பரிந்து பேசியது.
தலிபான்கள் அதிகாரத்துக்கு வருவது ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என்றும், இப்பிராந்தியம் சர்வதேச முக்கியத்துவத்தைப் பெறும் என்றும் அப்போதைய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறினார். அந்த நேரத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான், தலிபான்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது என்பது ஆப்கானியர்கள் அடிமைத்தனத்தின் தளைகளை உடைத்ததற்கு சமம் என்று கூறினார். இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்த நிலையில், தற்போது எதிரெதிர் நிலைகளை எடுத்திருப்பது ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT