Published : 26 Dec 2024 02:58 AM
Last Updated : 26 Dec 2024 02:58 AM
அக்டா: அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயங்களுடன் தப்பினர்.
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்பரர்-190 ரக விமானம் 67 பேருடன், அசர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷ்யாவின் செசன்யாவில் உள்ள க்ரோஸ்னி நகருக்கு நேற்று காலை சென்றது. அங்கு கடும் பனி மூட்டம் இருந்ததால், விமானம் கஜகஸ்தானின் அக்டா நகருக்கு திருப்பிவிடப்பட்டது.
அக்டா விமான நிலையத்தை நெருங்கியபோது, பறவை கூட்டம் விமானத்தில் மோதியது. விமானத்தின் திசையை மாற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி வேண்டுகோள் விடுத்தார். விமான நிலையத்தை சுற்றி பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கீழே இறங்கியது. விமானத்தை மேலே எழுப்ப விமானி முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கியது.
விமான நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள காஸ்பியன் கடற்கரையில் உள்ள நிலப் பகுதியில் வலதுபக்கம் சாய்ந்த நிலையில் தரையிறங்கி மோதியது. இதில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தின் அவசரகால கதவு வழியாக சில பயணிகள் வெளியேறினர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 35 பேர் உயிரிழந்தனர், 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இவர்களில் 5 பேர் மட்டும் பலத்த காயம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT