Published : 26 Dec 2024 02:39 AM
Last Updated : 26 Dec 2024 02:39 AM
காபூல்: பாகிஸ்தானைச் சேர்ந்த தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இவர்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தெக்ரிக்-இ-தலிபான்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதன்பின் இது போன்ற நடவடிக்கையை நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் விமானப்படை மேற்கொண்டது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பக்திகா என்ற பகுதியில் உள்ள 7 கிராமங்களில் தீவிரவாத பயிற்சிமுகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 46 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. உளவுத் தகவல் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை கண்டிக்கிறோம். வசிரிஸ்தான் அகதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற தன்னிச்சையான நடவடிக்கைகள் மூலம் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு தங்களின் நிலத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்க உரிமை உள்ளது. அதனால் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்’’ என கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT