Published : 24 Dec 2024 09:25 AM
Last Updated : 24 Dec 2024 09:25 AM
டெல் அவிவ்: ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 45,220-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் ஹமாஸ்களுக்கு எதிராக தொடங்கிய போரை இஸ்ரேல் அப்படியே மத்திய கிழக்கு முழுவதும் விரிவடையச் செய்தது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹவுத்திக்கள் என்று தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அளித்துள்ள பேட்டியில்,“ஹவுத்திகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தும் இந்த நாளில் நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் ஹமாஸ்களை, ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். இன்னும் அந்த அமைப்புகளின் தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் தலையைத் துண்டிப்போம்.
ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை ஒடுக்கிவிட்டோம். சிரியாவில் ஆசாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டோம். தீவிரவாத அச்ச ரேகைக்கு பெரிய அடி கொடுத்துள்ளோம். அதேபோல் ஏமனில் உள்ள ஹவுத்திகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம். ஹவுத்திகளின் உட்கட்டமைப்பு உத்திகளை தவிடுபொடியாக்குவோம். செங்கடலில் சரக்கு கப்பல்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை முறியடிப்போம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்கள் இஸ்ரேலுக்கு நெருக்கடி தருகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹனியே கடந்த 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஈரான், சிரியாவின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா மீண்டும் தலைதூக்கியது. அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் ரகசிய இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஈரானின் மூத்த தலைவர்கள், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே அவரின் இருப்பிடம் தெரியும். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம், காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் கொல்லப்பட்டார்.
இவற்றையெல்லாம் பட்டியலிட்டே தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தீவிரவாதத்தை ஒழித்து வருவதாகப் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT