Published : 23 Dec 2024 09:55 AM
Last Updated : 23 Dec 2024 09:55 AM
காசா: அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக் காட்டுகிறது.
மேலும், “மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி நடந்து கொள்கிறது. உணவு, தண்ணீர் லாரிகளை எடுத்துச் செல்ல அத்தனை அனுமதியும் கிடைத்த பின்னரும் கூட ஜபாலியாவில் தேவையே இன்றி லாரிகளை தடுத்து நிறுத்துகிறது. மேலும், ராணுவப் பகுதிகளில் உணவு, தண்ணீரை இறக்கிவைக்க ஓட்டுநர்களை நிர்பந்திக்கிறது. கடந்த மாதம் மட்டும் 11 லாரிகள் இவ்வாறாக நிறுத்திவைக்கப்படன.” என்று ஆக்ஸ்ஃபாம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேபோல், நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் அதிகாரிகள் திட்டுமிட்டு காசாவுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதைத் தடுத்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் அங்கே உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அந்த அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
45 ஆயிரத்தைக் கடந்த உயிர்ப்பலி: கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 45,220-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
UNHCR கவலை: இதற்கிடையில் தெற்கு காசாவின் அல் மவாஸியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் - காசா மோதல் சற்றும் தீவிரம் குறையாமல் தொடர்ந்து வருவதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) கவலை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT