Published : 21 Dec 2024 03:41 AM
Last Updated : 21 Dec 2024 03:41 AM

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தால், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசத் தயார்’’ என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டு மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. அந்தப் போர் இன்னும் தொடர்கிறது. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி அளித்து வருகின்றன.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பேட்டி ஒன்றில், ‘‘நான் அதிபராக இருந்திருந்தால், ரஷ்யா- உக்ரைன் போர் நடந்திருக்காது’’ என தெரிவித்திருந்தார். அவர் மீண்டும் அமெரிக்க அதிபர் ஆன பின்பு, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உறுதியை அவர் ஏற்கெனவே அளித்தள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு தயார். அரசியல் என்பது சமரசக் கலை. நாங்கள் பேச்சுவார்த்தைக்கும், சமரசத்துக்கும் தயார் என எப்போதும் கூறிவருகிறோம். ஆனால் இந்த பேச்சுவார்த்தை கள நிலவரப்படி இருக்க வேண்டும். நேட்டோவுடன் இணையும் முயற்சியை உக்ரைன் கைவிட்டு, ரஷ்யா இணைத்துள்ள பகுதிகளை அங்கீகரிக்க வேண்டும் என நாங்கள் முன்பே நிபந்தனை விதித்துள்ளோம்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை, ரஷ்யாவின் ராணுவத்தையும், பொருளாதாரத்தையும் பலப்படுத்தியுள்ளது. இந்த முடிவை நாங்கள் முன்பே எடுத்திருக்க வேண்டும். ரஷ்யா கடந்த 2 ஆண்டுகளாக மேலும் வலுவடைந்துள்ளது. ஏனென்றால் நாங்கள் உண்மையான இறையாண்மை கொண்ட நாடு. பொருளாதாரத்தை பொறுத்தவரை நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் எங்கள் ராணுவத்தை உலகிலேயே வலுவானதாக வலுப்படுத்தியுள்ளோம். உக்ரைன் மீதான போரில் நாங்கள் எங்கள் இலக்குகளை அடைந்துள்ளோம். எங்களின் ஆர்ஷனிக் ஏவுகணை தாக்குதலை, மேற்கத்திய நாடுகளின் வான்தடுப்பு ஏவுகணைகளால் தடுக்க இயலாது. இதை பரிசோதித்து கொள்ளலாம்.

மாஸ்கோவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இகார் கிரில்லோவ் படுகொலை செய்யப்பட்டது, பாதுகாப்பு படைகளின் மிகப் பெரிய தவறு. இச்சம்பவத்தில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டு, தங்களின் பாதுகாப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதியில் நுழைந்துள்ள உக்ரைன் படையினரை நாங்கள் நிச்சயம் விரட்டியடிப்போம். இவ்வாறு அதிபர் புதின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x