Published : 18 Dec 2024 09:00 PM
Last Updated : 18 Dec 2024 09:00 PM
மாஸ்கோ: புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல்.
புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய நாட்டு செய்தி முகமை TASS உறுதி செய்துள்ளது.
இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டி (ட்யூமர்) வளர்வதை தடுப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் (பிப்ரவரி) ரஷ்ய அதிபர் புதின், புற்றுநோய் தடுப்பு மருந்து உருவாக்கத்தினை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது அது குறித்து ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் பெர்சனலைஸ்ட் உருவாக்கத்தில் எம்ஆர்என்ஆ சார்ந்து மேட்ரிக்ஸ் கணக்கு மேற்கொள்ள ஏஐ உதவியை நாடியுள்ளதாகவும் தகவல். இவன்னிகோவ் கல்வி நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட நியூரல் நெட்வொர்க் கம்யூட்டிங் மூலம் ஒரு மணி நேரத்தில் இந்த கணக்குகளை மேற்கொண்டு அதற்கு தகுந்த வகையில் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கலாம் என அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் தெரிவித்துள்ளார். புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு கொண்ட செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் பணியை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT