Published : 16 Dec 2024 01:03 PM
Last Updated : 16 Dec 2024 01:03 PM
டாக்கா: வங்கதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் முகம்மது யூனுஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்த பொதுத் தேர்தலை 2025-ன் இறுதி அல்லது 2026-ன் முதல் பாதிக்குள் நடத்த முடியும். அனைத்து முக்கிய சீர்திருத்தங்களையும் முடித்துவிட்டு அதன் பிறகு தேர்தலை நடத்த அனைவரிடமும் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தற்போது தேர்தல் சீர்திருத்த ஆணையம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளை பொறுத்தே தேர்தலுக்கான காலக்கெடு அமையும். எனினும், அரசியல் கருத்தொற்றுமை காரணமாக, சிறிய அளவிலான சீர்திருத்தங்களுடன் குறைபாடற்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால், 2025ம் ஆண்டின் இறுதியில் தேர்தலை நடத்துவது சாத்தியமாகும்.
அதேநேரத்தில், எதிர்பார்க்கும் அளவுக்கு தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தப்படலாம் என்றால் அதற்கு கூடுதலாக 6 மாதங்கள் ஆகலாம். ஏனெனில், தேர்தல் சீர்திருத்தங்களை முழு அளவில் மேற்கொள்ள வேண்டுமானால், தேர்தல் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் தேசிய ஒருமித்த கருத்துகளின் அடிப்படையிலேயே அதனை செய்ய முடியும்.” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் படைகளிடம் இருந்து நாடு விடுவிக்கப்பட்ட 54வது வெற்றி தினத்தைக் குறிக்கும் வகையில், வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் இன்று டாக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தேசிய நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், வங்கதேச தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் மற்றும் வங்கதேசத்திற்கு அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள திமோர் அதிபர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா ஆகியோரும் தேசிய நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT