Published : 14 Dec 2024 03:44 PM
Last Updated : 14 Dec 2024 03:44 PM

ராணுவச் சட்டம் அமல் எதிரொலி | தென்கொரிய அதிபர் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

கோப்புப்படம்

சியோல்: தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல்-ஐ பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்களிக்கப்பட்டது. நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் அதிபரின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் யோல் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சியோலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக் வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அதிபர் யூனை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் யூன்பதவி நீக்கம் தொடர்பான தீர்மானத்துக்கு 204 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

யூன் சாக் யோல் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் ஹான் ட்யூக் சூ அதிபரின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். தற்போது யூனின் எதிர்காலத்தை தென்கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்மானிக்க இருக்கிறது. பதவி நீக்கம் குறித்து ஆலோசித்து அடுத்த 180 நாட்களுக்குள் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.

யூனின் பதவி நீக்கத்தை அரசியலமைப்பு நீதிமன்றம் ஆதரிக்கும் பட்சத்தில், கொரிய வரலாற்றில் ஆட்சியில் இருந்து இடையிலேயே பதவி நீக்கம் செய்யப்ப்டட இரண்டாவது அதிபராக யூன் சாக் யோல் இருப்பார். அதனைத் தொடர்ந்து 60 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

யூன் அவரது கட்சியான மக்கள் அதிகாரம் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கடந்த வாரம் நடந்த பதவி நீக்க தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்ததால் அவர் அப்போது பதவி நீக்கத்தில் இருந்து தப்பித்தார்.

யூன் சுக் யோல் கொண்டு வந்த ராணுவச் சட்ட அமல்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வந்த நிலையில், அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியில் நீடித்துவந்தார்.

கோரிக்கை தொடர்ந்து வலுவடைந்ததை அடுத்து, கடைசி வரை போராடுவேன் என்று தெரிவித்த யூன், தென்கொரியாவின் எதிர்க்கட்சி நாட்டின் கம்யூனிஸ எதிரிகளுடன் கூட்டுவைத்துள்ளது என்று குற்றஞ்சாட்டத் தொடங்கினார்.

தென்கொரியாவின் அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், மற்றும் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்று சனிக்கிழமை நடந்த வாக்கெடுப்புக்கு முன்பாக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தெரிவித்திருந்தது.

ராணுவச் சட்டம் அமலும், வீழ்ச்சியும்: டிசம்பர் 3ம் தேதி இரவு தொலைக்காட்சியில் தோன்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் தென்கொரியாவில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 எம்.பி.க்கள் வாக்களித்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த ராணுவச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தென் கொரிய அதிபர் யூன் சாக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதால் ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்தார்.

குறுகிய காலம் மட்டுமே நீடித்தாலும் யூன் அறிவித்த ராணுவச் சட்டம், நாட்டில் பெரிய அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசு நடவடிக்கைகளை முடக்கியது, நிதிச் சந்தைகளை உலுக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x