Published : 11 Dec 2024 08:42 PM
Last Updated : 11 Dec 2024 08:42 PM
சிரியாவில் உள்ள ஆயதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு முப்படைகள் மூலம் இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 500 முறை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக, சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக நடந்து வந்த மோதல் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முடிவுக்கு வந்தது. சிரியா அதிபர் ஆசாத் ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார். சிரியாவில் ஆசாத் குடும்பத்தினரின் 50 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
சிரியாவில் முகமது அல் பஷீர் தலைமையில் எதிர்க்கட்சியினர் மாற்று அரசை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சி படைக்கு அல்-கய்தா, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ஆதரவு உள்ளது. இதனால் சிரியாவின் ராணுவ கிடங்குகளில் இருந்த ஆயுதங்கள் எல்லாம் தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இது ஆபத்து என உணர்ந்த இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஆயுத கிடங்குகளை எல்லாம் அழிக்க முடிவு செய்தது. இந்தப் பணியை முப்படைகளிடமும் இஸ்ரேல் ஒப்படைத்தது.
இதையடுத்து, இஸ்ரேல் ராணுவத்தின் முப்படைகளும், சிரியாவில் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணைக் கிடங்குகள், விமானப்படை தளங்கள், டமாஸ்கஸ், ஹாம்ஸ் மற்றும் லதாகியா ஆகிய இடங்களில் உள்ள ஆயுத தொழிற்சாலைகள் ஆகியவற்றை குறிவைத்து 480 தாக்குதல்களை 48 மணி நேரத்துக்கு மேலாக நடத்தின.
இந்தத் தாக்குதல்களில் சிரியாவின் 15 போர்க்கப்பல்கள், நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. மக்கள் மற்றும் போர்க்கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்த இந்த தாக்குதல் நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியா மீது இஸ்ரேல் திடீரென பயங்கர தாக்குதல் நடத்தியதால், சிரியாவை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது. இதை மறுத்த இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள், “சிரியா எல்லையில் உள்ள இஸ்ரேலின் பகுதியை கைப்பற்றத்தான் ராணுவம் நுழைந்தது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் டேங்க்குகள் செல்கின்றன, என்ற செய்தி தவறானவை” என்றனர்.
இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கட்ஸ் கூறுகையில், “தெற்கு சிரியாவை ராணுவம் பலம் அற்றதாக மாற்ற இந்த தாக்குதல் அவசியம். ஆசாத் ஆட்சியை பின்பற்ற முயற்சிக்கும் எந்த ஒரு படைக்கும் இதே கதிதான் ஏற்படும். சிரியா எல்லையில் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக ஆயுத கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார்.
இதனிடையே, சிரியா எல்லையில் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கு எகிப்து, ஜோர்டன், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் நிலையற்ற தன்மையை, தனது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துக்கு இஸ்ரேல் பயன்படுத்தி கொள்வதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. சிரியாவின் ஒரு பகுதிக்குள் இஸ்ரேல் ஊடுருவியது 1974-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக உள்ளது என ஐ.நா கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT