Published : 10 Dec 2024 01:57 PM
Last Updated : 10 Dec 2024 01:57 PM
டமாஸ்கஸ்: சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க கிளர்ச்சியாளர்களுக்கு பிரதமர் முகம்மது ஜலாலி, துணை அதிபர் ஃபைசல் மேக்தாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ஒப்புதல்: சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் படை தலைநகரை கைப்பற்றியதை அடுத்து தற்போது அங்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளர்ச்சிப் படையின் முக்கிய தலைவர் அகமது அல் ஷாரா எனும் அபு முகம்மது அல் கொலானி, பிரதமர் முகம்மது ஜலாலி மற்றும் துணை அதிபர் ஃபைசல் மேக்தாத் ஆகியோரை இது தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ஜலாலி ஆட்சி மாற்றம் நிறைவடைய சில நாட்கள் ஆகும் என கூறியதாகக் கூறப்படுகிறது.
போர் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தண்டனை?: இதனிடையே, சிரிய மக்களுக்கு எதிராக சித்ரவதை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிரியா கிளர்ச்சித் தலைவர் அகமது அல் ஷாரா உறுதிபட தெரிவித்துள்ளார். “சிரிய மக்களை சித்திரவதை செய்வதில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொலைகாரர்கள், பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் அதற்கு பொறுப்பேற்க வைக்க நாங்கள் தயங்க மாட்டோம். போர் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து தகவல்களை அளிப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும்.” என்று அகமது அல் ஷாரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை: சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட இக்கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.,வுக்கான ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா, “சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பது, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வருவதை உறுதிசெய்வது ஆகியவற்றில் பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுபட்டுள்ளது.” என்று கூறினார்.
புகலிடம் வழங்க ஸ்விட்சர்லாந்து மறுப்பு: கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸை கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டின் நிலைமையை நன்றாக மதிப்பிடும் வரை சிரியா நாட்டவர்களுக்கு புகலிடம் அளிக்கப்பட மாட்டாது என்று ஸ்விட்சர்லாந்து அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்விட்சர்லாந்து நாட்டின் புலம்பெயரும் மக்களுக்கான மாநில செயலகம் வெளியிட்டுள்ள அளிக்கையில், சிரிய நாட்டவர்களுக்கு புகலிடம் அளிப்பத்கான காரணங்கள் நியாயமானதா அல்லது அவர்களை நாடு கடத்துவதற்கான உத்தரவை நிறைவேற்றுவது நியாயமானதா என்பது குறித்து முழுமையாக ஆய்வு நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசுக்கு ஆதரவு: சிரியா அதிபர் பஷார் அல் அசாத் நாட்டைவிட்டு வெளியேறியதை அடுத்து அமைய இருக்கும் புதிய அரசுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொடூரமான அசாத் ஆட்சியிலிருந்து அனைத்து சிரியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட சிரியாவை நோக்கி அந்நாட்டு மக்கள் மாறும்போது அவர்களின் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு அமெரிக்காக ஆதரவளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT