Published : 09 Dec 2024 03:47 PM
Last Updated : 09 Dec 2024 03:47 PM
புதுடெல்லி: இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால், மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால், 170-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன.
இந்த நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் 172 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் நெல் வயல்களை மோசமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலையால் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால், ஏறக்குறைய 1,000 மக்களை வெளியேற்றுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுகபூமி நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், எருமைகள் மற்றும் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுகிறது.
இந்தோனேசியாவில் பருவமழை காலங்களில் அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் மலைப்பகுதிகளில் அல்லது சமவெளிகளுக்கு அருகில் வாழ்கின்றனர். கடந்த மாதம், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT