Published : 09 Dec 2024 09:23 AM
Last Updated : 09 Dec 2024 09:23 AM
மாஸ்கோ: மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் வசிப்பிடமான க்ரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவலை சுட்டிக்காட்டி இத்தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.
பைடன் வரவேற்பு: இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். “அதிபர் ஆசாத்தின் வீழ்ச்சி நீதியின் வெற்றி. இது பல ஆண்டுகளாக துன்பப்பட்டுவரும் சிரிய மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் தேசத்தை வளமான எதிர்காலத்துக்காக கட்டமைக்க உதவும். அவர்கள் தங்கள் நாட்டை பெருமைமிகு அடையாளமாக மாற்ற உதவும்” என்று அதிபர் பைடன் வரவேற்றுள்ளார்.
சிரிய பிரச்சினையின் பின்னணி: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் தேதி அதிபரானார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அதிபர் ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்தன. கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி, அமெரிக்கா ஆதரவு அளித்தன. கடந்த 2014-ல் சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. அதிபர் ஆசாத் படைகள் கிளர்ச்சிப் படைகள் இடையிலான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
பின்னர், ரஷ்யா, ஈரானின் ஆதரவால் அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் போரை தொடர்ந்து, சிரியா அதிபர் ஆசாத்தின் ராணுவத்துக்கு ரஷ்யா, ஈரானின் ஆதரவு படிப்படியாக குறைந்தது.
கடந்த 1-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றியது. அடுத்தடுத்து பல்வேறு நகரங்களை கைப்பற்றிய எச்டிஎஸ் படை வீரர்கள், நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர்.
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, மனைவி, பிள்ளைகள் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், தற்போது ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT