Published : 07 Dec 2024 12:28 PM
Last Updated : 07 Dec 2024 12:28 PM
சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத, முன்னெப்போதும் இல்லாத ‘அரசியல் சம்பவம்’ ஒன்று தென்கொரியாவில் அரங்கேறியது. அந்நாட்டு அதிபர் யூன் சாங் யோல், தங்கள் நாட்டில் இருந்து வடகொரிய ஆதரவாளர்களை வெளியேற்றுவதற்காகவும், தென்கொரிய அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் ‘அவசரநிலை’யை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
தென்கொரிய அதிபரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள், பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து, அதிபர் யூனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கொந்தளிப்பான சூழலைத் தொடர்ந்து, ‘அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது’ என்று தென்கொரிய நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்தார். ஆக, அவசரநிலை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரத்தும் செய்யப்பட்டது.
இந்த அவசரநிலை பிரகடன விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து தென்கொரிய அதிபர் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. சொந்த காசில் சூனியம் வைத்தது போலாகிவிட்டது, தென்கொரிய அதிபர் யூன் சாங் யோலின் நிலை.
அதிகாரத்தில் இருப்பவர்களை பதவியில் இருந்து இறக்குவதற்காக, ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளில் அரசியல் எதிராளிகள் ஈடுபடுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால், யூன் தனது சொந்த ஆட்சியைக் கலைத்து, ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றது ஏன்? இந்த சுய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையின் நோக்கம் என்ன? இந்தப் புதிய போக்கு பற்றி அரசியல் வரலாறு என்ன சொல்கிறது என்பதை சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
ரத்து செய்யப்படுவதற்கு முன்பு வரை சில மணி நேரங்களாவது அமலில் இருந்த தென்கொரியாவின் அவசரநிலைப் பிரகடனம் என்பது, அரசியல் அறிஞர்களால் ‘சுய ஆட்சிக் கவிழ்ப்பு’ (Autogolpe) அல்லது ‘சுய-சதி’ (self-coup) என்று அழைக்கப்படும் சம்பவங்களுக்கு சமீபத்திய உதாரணம் என்கின்றனர் ‘ஆட்சிக் கவிழ்ப்பின் வகைகள் மற்றும் தன்மைகள்’ என்ற தொகுப்பு நூலின் ஆசிரியர்களும், சர்வதேச அரசியல் பேராசிரியர்களுமான ஜான் ஜோசப் சின் மற்றும் ஜோ ரைட். இரண்டாம் உலகப் போருக்கு பின்பு உலகில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்துவதில் இவர்கள் இருவரும் தீவிரம் காட்டியுள்ளனர்.
இவர்களுடைய தரவுகளின்படி, இரண்டாம் உலகப் போருக்கு பின்பு (1945) ஒப்பீட்டு அளவில் கடந்த பத்தாண்டுகளில் ‘சுய ஆட்சிக் கவிழ்ப்பு’ என்பது ஒரு பொதுவான போக்காக மாறியுள்ளது. அது என்ன ‘சுய ஆட்சிக் கவிழ்ப்பு’, அது ஏன் நடக்கிறது, தென் கொரிய அதிபரின் முயற்சி ஏன் தோல்வியுற்றது என்பதை வரலாற்றின் வழியாக சுவாரஸ்யமாக விளக்குகின்றனர் ஜான் ஜோசப் சின், ஜோ ரைட்.
அனைத்து ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுவான ஒரு தன்மை உண்டு. அவை ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கும்.
பொதுவாக ஆட்சிக் கவிழ்ப்பு என்பது அதனை முன்னெடுப்பவர்களால், முந்தைய ஆட்சியாளர்கள் அல்லது தலைவர்களிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியேயாகும். வரலாற்று ரீதியாக பெரும்பாலான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் ராணுவத்தால் அல்லது அதன் உதவியுடனேயே நடந்துள்ளன. ஒரு சில ஆட்சிக் கவிழ்ப்புகள், தலைவர்களால் வழிநடத்தப்பட்டுள்ளன.
ஆனால், ‘சுய ஆட்சிக் கவிழ்ப்பு’ என்பது இதற்கு நேரெதிரானது. இங்கு, ஒரு நாட்டின் தலைவர் சட்டவிரோதமாக மாற்றப்படுவதற்கு பதிலாக, அதிகாரத்தில் இருப்பவரே மற்றவர்களுக்கு எதிராக அதிகாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறார். அதாவது, ஆட்சியில் இருப்பவர், தொடர்ந்து தான் அதிகாரத்தில் இருக்கும் நோக்கத்துடன் நாடாளுமன்றம் அல்லது நீதித்துறைக்கும் தனது அதிகாரத்தை நீட்டிக்கும் வகையில் செயல்படுகிறார்.
இதற்காக சுய ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுபவர், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் ராணுவத்தைப் பயன்படுத்தி, அதன் உதவியுடன் ஒரு சர்வாதிகார அவதாரம் எடுக்கிறார். தென்கொரியாவில் இதைத்தான் அதிபர் யூன் சாங் யோல் முயற்சித்தார். ஆனால் அதில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
தென்கொரிய அதிபர் யூனின் முயற்சியுடன் சேர்த்து, கடந்த 1946-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் 46 முறை ‘சுய ஆட்சிக் கவிழ்ப்பு’ சம்பவங்கள் நடந்து உள்ளதாக தாங்கள் திரட்டிய தரவுகள் தெரிவிப்பதாக கூறுகின்றனர் ஜான் ஜோசப் சின்னும், ஜோ ரைட்டும். மேலும், இந்தச் சூழல்கள் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும்போது சுய ஆட்சிக் கவிழ்ப்பின் பொதுவான தன்மைகளை அடையாளம் காண முடிவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஜனநாயக நாட்டில் நிகழும் சுய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் சரி பாதி, அதன் நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை முடக்கத்தை குறிவைத்தே நிகழ்கிறது. 40 சதவீதம் தேர்தல் நடைமுறைகளை குறைமதிப்பீடு செய்வதற்கோ அல்லது தேர்தலில் வென்றவர் அதிகாரத்துக்கு வருவதை தடுப்பதற்காகவோ நிகழ்கிறது.
ஜனநாயக நாடுகளில் நடக்கும் சுய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே இதுபோல அவசரநிலை பிரகடனத்தை உள்ளடக்கி உள்ளன. பொதுவாக, எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்கள், தேர்தல் தலையீடுகளுக்காவே இவை மேற்கொள்ளப்படுகின்றன. சுய ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடும் தலைவர்களில் ஐந்தில் ஒருவர் அரசியலமைப்பை முடக்குகிறார் அல்லது ரத்து செய்கிறார்.
ஆட்சிக் கவிழ்ப்போ அல்லது சுய ஆட்சிக் கவிழ்ப்போ இரண்டுமே ஜனநாயகத்துக்கு எதிரான பொதுப் பாதைகளே. பனிப்போர் காலத்தில் ஜனநாயக படுகொலைக்கு ஆட்சிக் கவிழ்ப்பு காரணமாக இருந்தன. சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்பு, 1990-களின் ஆரம்பத்தில் ஜனநாயக படுகொலைக்கான முக்கிய காரணியாக சுய ஆட்சிக் கவிழ்ப்பு மாறியது. கடந்த 1946-க்கு பின்பு ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட சுய ஆட்சிக் கவிழ்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, கடந்த பத்தாண்டுகளிலேயே நிகழ்ந்துள்ளன.
சுய ஆட்சிக் கவிழ்ப்புகான காரணங்களில் ஒன்று, அதனைச் செய்யும் அதிபரோ அல்லது பிரதமரோ ஆட்சிக் கவிழ்ப்பில் தங்களால் உறுதியாக வெல்ல முடியும் என்று தீவிரமாக நம்புகின்றனர். யூன் சாங் யோலும் அவ்வாறே நம்பினார். ஆனால், யூன் சாங் யோல் சொந்தக் கட்சியினரின் ஆதரவை முன்கூட்டியே பெறாமல் தனது அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தார் என்பது அசாதாரணமானது.
இங்கே ஓர் அரசியல் விநோதத்தை சுட்டிக் காட்டும் அரசியல் நிபுணர்கள், பாரம்பரியமான முறைப்படி மேற்கொள்ளப்படும் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வியைச் சந்திக்கும் அதேவேளையில், சுய ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஐந்தில் நான்கு வெற்றி பெற்று விடுகிறது. அப்படியானால், தென்கொரிய அதிபர் யூன் எங்கே சறுக்கினார்?
ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளின் வெற்றி என்பது ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்களின் கூட்டணி, ராணுவ உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி உள்ளது. அதேநேரத்தில், சுய ஆட்சிக் கவிழ்ப்புகளின் தோல்வி என்பது, ராணுவம் மற்றும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் திடீர் விலகல் போன்றவற்றால் நிகழ்கிறது. இந்தக் குறைப்பாடுகள், கட்சிக் கட்டமைப்பு மற்றும் தற்செயல் காரணங்களை உள்ளடக்கி உள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக பெருவாரியான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும்போது, அவர்களை எதிர்கொள்ளும் ராணுவத்தினர் பதற்றமடைந்து பின்வாங்கி விடுகின்றனர். ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான சர்வதேச கண்டனமும், ஜனநாயகத்துக்கான மக்களின் ஆதரவும் ‘சுய ஆட்சிக் கவிழ்ப்பு’ வெற்றியைத் தீர்மானிக்க உதவுகிறது.
தென்கொரியா கடந்த 1961 முதல் 1987 வரை ராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது என்றாலும், கடந்த சில பத்தாண்டுகளாக அந்நாடு ஜனநாயத்தின் வழியில் பயணித்து வருகிறது. அங்கு நடைமுறையில் உள்ள இந்த அமைப்பு அச்சுறுத்தப்பட்டதாக எண்ணம் உருவானபோது, அனைத்து கட்சி உறுப்பினர்களும் யூனுக்கு எதிராக வாக்களிக்க ஒன்றிணைந்தனர்.
இதனால் தென்கொரிய அதிபர் யூனின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அவரின் இந்த சுய ஆட்சிக் கவிழ்ப்பு அறிவிப்புக்கு எதிராக ஆறு எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானத்தை அளித்துள்ளன. நாடாளுமன்றத்தில், அந்தத் தீர்மானம் வெற்றி பெற, 300 உறுப்பினர்களில் 200 பேரின் ஆதரவு வேண்டும். இப்போது வரை, யூன் கட்சியைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் உட்பட 190 பேர் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இன்னும் ஒரு சிலரே வாக்களிக்க வேண்டும். விடையை காலம் சொல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT