Published : 04 Dec 2024 10:06 AM
Last Updated : 04 Dec 2024 10:06 AM
சியோல்: தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 190 எம்.பி.க்கள் வாக்களித்தனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். உடனடியாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதால் ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் பலரும் ஆராவாரம் செய்து கொண்டாடினர். இந்த அவசரநிலை பிரகடன விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து அதிபர் யூன் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
தென் கொரியாவை 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்துவந்த பார்க் சங் ஹீ 1979-ல் கொல்லப்பட்டபோது அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT