Published : 04 Dec 2024 03:53 AM
Last Updated : 04 Dec 2024 03:53 AM

பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா: மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை

வாஷிங்டன்: ‘‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடமாக இந்தியா உள்ளது. அதன் வெற்றியை இந்தியாவில் நிருபிக்கும்போது, அந்த நடைமுறையை நாம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம்.

வெளிநாடுகளில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அறக்கட்டளை அலுவலங்களில், இந்தியாவில் இருக்கும் அலுவலகம் மிகப் பெரியது. உலகின் பல இடங்களில் நாங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான திட்டங்கள் இந்தியாவுடன் தொடர்புடையதுதான். இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.

இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியர்கள் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். பில்கேட்ஸ் பேட்டி குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இந்தியர் ஒருவர், ‘‘இந்தியா சோனைக்கூடம் தான். இந்தியர்கள்தான் பில்கேட்ஸ் போன்றோர்களுக்கு பரிசோதனை எலிகள். பில்கேட்ஸ் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள், ஊடகம் என அனைவரையும் சமாளிக்கிறார். இந்தியாவில் அவரது அலுவலகம், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்துக்கு உட்படாமல் செயல்படுகிறது. நமது கல்விமுறை அவரை ஹீரோவாக்கியுள்ளது. நாம் எப்போது விழிப்போம் என தெரியவில்லை’’ என கூறியுள்ளார்.

இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஒருவர், ‘‘ பில்கேட்ஸ் மீதான குற்றச்சாட்டு தேவையற்றது. இந்தியாவில் பில்கேட்ஸ்க்கு எதிரான மனநிலை ஏன் என புரிந்து கொள்ளமுடியவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x