Published : 03 Dec 2024 07:02 PM
Last Updated : 03 Dec 2024 07:02 PM

துணைத் தூதரகத்தில் அத்துமீறல்: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் - திரிபுராவில் நடந்தது என்ன?

டாக்கா: திரிபுராவின் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்தியத் தூதருக்கு வங்கதேச அரசு சம்மன் அளித்துள்ளது.

இதையடுத்து, வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரனாய் வெர்மா, "வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை செயலர் ரியாஸ் ஹமிதுல்லாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரனாய் வெர்மா, இந்தியா - வங்கதேசம் இடையே பரந்த பன்முக உறவு உள்ளது. அதனை ஒரே ஒரு விஷயமாக சுருக்க முடியாது. மின் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி என இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு விஷயங்களில் முன்னேற்றங்கள் உள்ளன.

நாங்கள் உண்மையில் நேர்மறையான, நிலையான, ஆக்கபூர்வமான உறவை முன்னோக்கி நகர்த்த விரும்புகிறோம். அதற்காக நாங்கள் பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இதன் மூலம் பரஸ்பர நன்மைகளை உருவாக்க விரும்புகிறோம். மேலும், நமது ஒத்துழைப்பு நம் இருவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

கடந்த சில மாதங்களில், அது வர்த்தகமாக இருந்தாலும், மின்சாரம் பரிமாற்றமாக இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விநியோகமாக இருந்தாலும், நாங்கள் நேர்மறையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். நாங்கள் வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் நமது பகிரப்பட்ட விருப்பங்களை அடைய இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று (டிச.2) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து அந்நாட்டு கொடியை சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்தை அடுத்து, வங்கதேச அரசு இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. மேலும், அகர்தலா துணை தூதரகத்தில் விசா சேவை உள்பட அனைத்து சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவித்தது. அதேநேரத்தில், அகர்தலாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

தேசிய ஒற்றுமைக்கு யூனுஸ் அழைப்பு: இதனிடையே, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த யூனுசின் செய்தித் தொடர்பாளர் ஷஃபிகுல் ஆலம், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இன்று (டிச. 3) மாலை மாணவர் தலைவர்களை முகம்மது யூனுஸ் சந்திக்க உள்ளார். இதையடுத்து நாளை அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மத தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x