Published : 03 Dec 2024 05:39 AM
Last Updated : 03 Dec 2024 05:39 AM
புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது தலைவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
ரஷ்யாவின் கஸான் நகரில், 'பிரிக்ஸ்' நாடுகளின் 16-வது மாநாடு நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள், சர்வதேச அரசியல், பொருளாதார நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
ரஷ்ய - இந்திய தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது என்று ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், 23-வது இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்க இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 22-வது இந்திய - ரஷ்ய ஆண்டு மாநாடு நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி. இந்த ஆண்டு மட்டும் அதிபர் புதினும். பிரதமர் மோடியும் 2 முறை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரம்ளினின் உதவியாளர் யூரி உஷகோவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் புதின் இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த பயணம் இருக்கும். அதற்கான தேதிகளை இந்திய அரசு முடிவு செய்யும். இருநாட்டு தலைவர்களும் ஆண்டுக்கு ஒரு முறை நேரில் சந்திப்பதும் ஏற்கெனவே முடிவானது. அதன்படி அடுத்த ஆண்டு இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT