Published : 01 Dec 2024 03:59 AM
Last Updated : 01 Dec 2024 03:59 AM

வங்கதேசத்தில் 3 கோயில்கள் மீது தாக்குதல்: இஸ்கான் அமைப்​பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்​குகள் முடக்கம்

தாகா / நாக்பூர்: வங்​கதேசத்​தில் மேலும் 3 கோயில்கள் மீது வன்முறை கும்பல் தாக்​குதல் நடத்தியுள்ளது. இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இஸ்கான் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்கசென்ற இன்னொரு பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இது இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்​தில் பழைய இடஒதுக்​கீடு முறை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் பலர் உயிரிழந்தனர். பிரதமர் பதவியை ராஜினாமாசெய்த ஷேக் ஹசீனா, இந்தியா​வில் தஞ்சம் அடைந்​துள்ளார். தற்போது வங்கதேசத்​தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்​துள்ளது.

இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு, வங்கதேசத்தில் சிறு​பான்​மை​யினராக உள்ள இந்துக்கள் மற்றும் கோயில்கள் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் தாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெற்று வந்தன.

இந்த சூழலில், போராட்டத்தை தடுக்கும் விதமாக, சின்​மோய் கிருஷ்ணதாஸை தேச துரோக வழக்​கில் வங்கதேச அரசு கைது செய்​தது. அவருக்கு ஜாமீனும் மறுக்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், சட்டோகிராம் (சிட்​ட​காங்) பகுதி​யில் கடந்த 29-ம் தேதி வெள்​ளிக்​கிழமை பிற்​பகலில் தொழுகை முடிந்த பிறகு, சந்தானேஷ்வரி மாத்ரி கோயில், சனீஸ்வரன் கோயில், காளி கோயில் ஆகிய 3 கோயில்கள் மீது ஒரு கும்பல் தாக்​குதல் நடத்​தி​யது. இதில், கோயில்கள் சேதம் அடைந்​தன.

திடீரென வந்த ஒரு கும்பல் கற்களை வீசி தாக்​குதல் நடத்​தி​யதாக கோயில் நிர்​வாகத்​தினர் கூறினர். கோயில்களுக்கு லேசான சேதம் மட்டுமே ஏற்பட்​டுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவிக்​கின்​றனர். இதற்​கிடை​யே, சின்​மோய் கிருஷ்ண தாஸ் மற்றும் இஸ்கான் அமைப்​பினர் உட்பட 17 பேரின் வங்கிக் கணக்​குகளை 30 நாட்​களுக்கு வங்கதேச நிர்​வாகம் முடக்கி உள்ளது. இஸ்கான் அமைப்​புக்கு தடை விதிக்க அந்நாட்டு உச்ச நீதி​மன்றம் மறுத்த நிலை​யில், அவர்களது வங்கிக் கணக்​குகள் கடந்த 28-ம் தேதி முடக்​கப்​பட்​டுள்ளன.

வங்கதேசத்தில் இந்துக்கள், இந்து கோயில்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்களுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரி​வித்​துள்ளது. இந்துக்கள், கோயில்​களின் பாது​காப்பை உறுதிப்​படுத்​துமாறு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மோய் கிருஷ்ண தாஸை சந்திக்க, பூசாரி ஷியாம் தாஸ் பிரபு நேற்று சென்றுள்ளார். அப்போது, அரசு வாரன்ட் எதுவும் இல்லாமல் அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இத்தகவலை இஸ்கான் துணை தலைவர் ராதாராம் தாஸ் நேற்று உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, தேச துரோக வழக்கில் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டிருப்பது வங்கதேச இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் கண்டனம்: இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் நேற்று வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள், கொலை, கொள்ளைகள், தீவைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. மத தீவிரவாதிகளின் இந்த செயல்களை ஆர்எஸ்எஸ் வன்மையாக கண்டிக்கிறது. முகமது யூனுஸ் தலைமையிலான அரசு இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, கண்டும் காணாமல் உள்ளது.

எந்த உதவியும் கிடைக்காமல் ஜனநாயக முறையில் குரல் எழுப்பும் வங்கதேச இந்துக்கள் மீது அநீதி மற்றும் அடக்குமுறை நடப்பது தெளிவாக தெரிகிறது. தேச துரோக வழக்கில் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டது நியாயமற்றது. வங்கதேச அரசு அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை தடுத்து நிறுத்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு தொடர வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

எனினும், இடைக்கால அதிபரின் செயலர் சஃபிகுல் இஸ்லாம் கூறும்போது, “வங்கதேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளனர். சிறுபான்மையினருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இஸ்கான் அமைப்பை தடை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை. சின்மோய்கிருஷ்ண தாஸுக்கு எதிரான விசாரணை நியாயமாக நடைபெறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x