Published : 29 Nov 2024 04:52 AM
Last Updated : 29 Nov 2024 04:52 AM
வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதியில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்
தின் பேரில் இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எகிப்து அரசின் உயர்நிலைக் குழு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 254 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் 154 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னமும் 100 பேர் ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். அவர்களை விடுவிக்க, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,000 ஹமாஸ் தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இவை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஹமாஸ் வட்டாரங்கள் கூறும்போது, “லெபனான் உடன் எந்த நிபந்தனையும் இன்றி இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. காசாவிலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்த விரும்புகிறோம். ஆனால், இஸ்ரேல் அரசு போர் நிறுத்தத்தை விரும்பவில்லை” என்று தெரிவித்தன.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறும்போது, “தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரியில் முடிவடைகிறது. அதற்குள் காசாவில் போர் நிறுத்தம் அமலாகும். இதுதொடர்பாக இஸ்ரேல் அரசு - காசா நிர்வாகம் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று தெரிவித்தன. இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நீடித்து வந்தது. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்தது.
இந்த சூழலில் அமெரிக்கா, பிரான்ஸின் சமரச முயற்சியால் இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “எல்லைப் பகுதிகளில் இருந்து 40 கி.மீ. தொலைவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் பின்வாங்க வேண்டும். அந்த பகுதிகளில் ஐ.நா. அமைதிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும். 28-ம் தேதி அதிகாலை முதல்போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. எனினும், லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற சில நாட்கள் ஆகலாம். இந்த போர் நிறுத்தம் 60 நாட்கள் அமலில் இருக்கும்” என்று தெரிவித்தன.
இதுகுறித்து லெபனான் அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். பெய்ரூட்டில் பெரும்பான்மையான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருப்பதால் புதிய வீடுகளை கட்ட சர்வதேச நாடுகளின் உதவியை எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தன.
இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் அப்பகுதியில் சில மர்மநபர்கள் நேற்று வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment