Published : 28 Nov 2024 10:42 PM
Last Updated : 28 Nov 2024 10:42 PM

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா: ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

சிட்னி: 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு வியாழக்கிழமை (நவ.28) நிறைவேற்றியுள்ளது.

உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் இந்த சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. சிறுவர்கள் லாக் இன் செய்வதை தடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் சோதனை முறையில் வரும் ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வர ஒரு வருடம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. பிரான்ஸ், அமெரிக்காவின் சில மாகாணங்களில் பெற்றோரின் அனுமதியின்றி சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்ற்பட்டுள்ளன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய அரசு இதனை முழுமையாக தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மசோதாவுக்கு சில குழந்தைகள் உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 77 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த சட்டம் குறித்து பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் “இது பெற்றோருகளுக்கானது. சமூக வலைதளத்தில் மூழ்கி இருக்கும் குழந்தைகளை எண்ணி வாட்டம் கொண்டுள்ள என்னைப் போலவே உள்ள பெரும்பாலான பெற்றோர்களுக்கானது இது. ஆஸ்திரேலிய குடும்பங்களின் பக்கம் அரசு எப்போதும் நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x