Published : 27 Nov 2024 08:03 PM
Last Updated : 27 Nov 2024 08:03 PM

இஸ்ரேல் போர் நிறுத்தம் - ‘விவரிக்க முடியாத மகிழ்ச்சி’யுடன் வீடு திரும்பும் லெபனான் மக்கள்!

புதுடெல்லி: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததையொட்டி, காலையில் இருந்து மக்கள் தெற்கு லெபனானில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத் சாரை சாரையாக திரும்பி வருகின்றனர். இதனிடையே, இந்தியா, சீனா, ஈரான், கத்தார் ,சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளன.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை சுமார் 3,750 பேர் உயிரிழந்த நிலையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே இரண்டு மாத போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தனது ஆயுதக் குழுக்களை விலக்கிக் கொள்ளும். இதுபோல் இஸ்ரேலும் அங்கிருந்து தனது படைகளை திரும்பப் பெறும். தெற்கு லெபனானில் அந்நாட்டு ராணுவ வீரர்களும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும். ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பதவி விலக இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், லெபனான் நாட்டு ராணுவம் தெற்கு பகுதிக்கு செல்லவும், ஐ.நா-வின் 1701 தீர்மானத்தின் கீழ் அதன் பணியை மேற்கொள்ள தயாராகி வருவதாக கூறியுள்ளது.

‘விவரிக்க முடியாத மகிழ்ச்சி’ - போர் நிறுத்தம் காரணமாக தெற்கு லெபனான் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் அதிகாலையில் இருந்து மக்கள், தெற்கில் உள்ள தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை எங்களாலே விவரிக்க முடியவில்லை. மக்கள் வெற்றி பெற்றனர்!" என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் உட்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் இதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறி செயல்பட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

அக்டோபர் தொடக்கத்தில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் மிகுந்த கவலை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியா அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே போருக்கு தீர்வு காண முடியும் என அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்தது நினைவுகூரத்தக்கது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கிறோம். பதற்றத்தை தணிக்கவும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம். இந்த முன்னேற்றம், இந்தப் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளது.

உலக நாடுகள் சொல்வதென்ன? - காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று பாலஸ்தீனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து சீனா, “பதற்றங்களைத் தணிப்பதற்கும், அமைதியை உறுதிப்படுத்தவும் நாங்கள் ஆதரவளிப்போம்” எனத் தெரிவித்துள்ளது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் “லெபனானில் போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். சியோனிச ஆட்சியின் அடக்குமுறை முடிவடைந்துள்ளது. இன்றிரவு மக்கள் அமைதியை உணர்வார்கள்” என்கிறார்.

மேலும், கத்தாரும் ,சவுதி அரேபியாவும் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளன. இது குறித்து எகிப்து வெளியுறவு அமைச்சகம், "காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு இது ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும்" என்று கூறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x