Last Updated : 16 Jun, 2018 02:43 PM

 

Published : 16 Jun 2018 02:43 PM
Last Updated : 16 Jun 2018 02:43 PM

இந்தோனேஷியாவில் பெண்ணை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு: வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த மக்கள்

இந்தோனேஷியாவில் தோட்டத்துக்கு சென்ற பெண்ணை ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது. தேடிச் சென்ற உறவினர்கள், பாம்பின் வயிற்றைக் கிழித்து அந்த பெண்ணை சடலமாக மீட்டனர்.

இந்தோனேஷியாவின் முன்னா தீவில் உள்ள சுலாவெசி நகரில் பெர்சியாபென் லாவெலா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வா திபா(வயது51). வியாழக்கிழமை தனது தோட்டத்தில் காய்கறிகள் பறிப்பதற்காக வா திபா சென்றார். ஆனால், இரவுமுழுவதும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவரின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், வா திபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக தோட்டத்துக்குச் சென்று அவரைத் தேடியபோது, அங்கு ராட்சத மலைப்பாம்பு ஏதோ இரையைத் விழுங்கிவிட்டு நகர முடியாமல் படுத்திருப்பதை கிராமமக்கள் கண்டனர்.

ஒருவேளை திபாவை மலைப்பாம்பு விழுங்கி இருக்கலாம் எனசந்தேகித்த கிராம மக்கள், அந்த ராட்சத மலைப்பாம்பைக் கொன்று, அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் கிழித்துப்பார்த்து திபா சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் போலீஸ் ஹெம்கா கூறுகையில், ஏறக்குறைய 23 அடி(7.5 மீட்டர்) நீளத்தில் பாம்பு தோட்டத்தில் படுத்து நகரமுடியாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இதற்கு முன் சிறிய அளவிலான மலைப்பாம்புதான் இந்த பகுதியில் சுற்றித் திரியும், ஆனால், இதுபோன்ற ராட்சத மலைப்பாம்பை நாங்கள் பார்த்தது இல்லை.

ஒருவேளை திபாவை இந்தப் பாம்பு விழுங்கி இருக்கலாம் என திபாவின உறவினர்களும், கிராம மக்களும் சந்தேகித்தனர். இதையடுத்து, அந்தப் பாம்பின் வயிற்றைக்கிழித்துப் பார்த்தபோது, திபா சடலமாகக் கிடந்தார். தோட்டத்துக்குக் காய்கறி பறிக்கச் சென்ற திபாவை இந்த ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கி இருக்கும் என நினைக்கிறோம்.

தோட்டம் இருக்கும் பகுதி பாம்புகள் அதிகமாக வசிக்கும் பாறைகள், குழிகள் நிறைந்த பகுதியாகும். இதற்கு முன் 15 அடி அளவிலான அளவிலான பாம்புகளை மட்டுமே கிராம மக்கள் பார்த்த நிலையில், இதுபோன்ற 20 அடிக்கும் பெரிய மலைப்பாம்பைப் பார்த்தது இல்லை.

வழக்கமாக ஆடுகள், கோழிகள், சிறு உயிரினங்களைத்தான் மலைப்பாம்புகள் அடித்துக் கொல்லும் எனக் கேட்டிருக்கிறோம். மனிதர்களை உயிருடன் விழுங்கும் எனக் கதைகளில் படித்திருக்கிறோம், திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். ஆனால், அனைவரும் இப்போதுதான் நேரடியாகப் பார்த்தோம். இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் சலுபிரோ கிராமத்தில் ஒரு ஆட்டைக் கூட மலைப்பாம்பு விழுங்கியது. ஆனால் இப்போதுதான் மனிதரை விழுங்கி இருக்கிறது

இவ்வாறு போலீஸ் ஹெம்கா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x