Published : 19 Nov 2024 08:25 PM
Last Updated : 19 Nov 2024 08:25 PM

உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்கள்: ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில், அந்நாட்டின் மீதான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இருப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி செவ்வாய்க்கிழமையோடு 1,000 நாள் நிறைவடைந்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு தகர்ந்துள்ளன. இதனிடையே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. அதன் அடிப்படையில், நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது.

எனினும், இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்கியுள்ளார். இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தும்பட்சத்தில் ரஷ்யாவுக்கு தீவிர பாதிப்பு ஏற்படும். இந்தச் சூழலில், உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப தன் அணு ஆயுதக் கொள்கையில் ரஷ்யா மாற்றம் கொண்டு வந்துள்ளது.

அதிபர் புதின் கையெழுத்து; அணு ஆயுதம் இல்லாத நாடு (உக்ரைன்), அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் (அமெரிக்கா) கூட்டணி வைத்து ரஷ்யா மீது போர்த் தாக்குதல் மேற்கொண்டால், பதிலுக்கு அந்நாட்டின் மீது ரஷ்யாவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்ட நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், பதிலுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களில் ரஷ்ய அதிபர் புதின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப எங்களது அணு ஆயுதக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவது முக்கியம். அணு ஆயுதங்களை தவிர்ப்பதற்கான வழிகளையே நாங்கள் பார்க்கிறோம். ஆனால், அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும். அணு ஆயுதம் இல்லாத நாடு அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் இணைந்து போரில் ஈடுபட்டால் அது கூட்டுத் தாக்குதலாகவே கருதப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்று புதின் தொடர்ந்து எச்சரித்து வந்தார். எனினும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வந்தன. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்த உக்ரனைக்கு அனுமதி வழங்கினால், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான போராக அது மாறும் என்று புதின் எச்சரித்திருந்தார்.

மேலும், அணு ஆயுதப் பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப் போவாத ரஷ்யா கூறி வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு காரணமாக, ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே, கடைசியாக கிடைத்த தகவலின்படி, அமெரிக்க வழங்கிய நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை தங்கள் நாட்டின் மீது உக்ரைன் ஏவியாதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஐந்தினை சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், ஒன்று சேதமடைந்துவிட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x