Published : 19 Nov 2024 07:10 PM
Last Updated : 19 Nov 2024 07:10 PM
ரியோ டி ஜெனிரோ: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் பேச்சுவார்த்தை நடத்தினர். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டின் இடையே, இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், "இந்தியா - சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய முன்னேற்றம் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். மேலும், இருதரப்பு உறவுகளின் அடுத்த படிகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். அதோடு, உலகளாவிய நிலைமை குறித்தும் விவாதித்தோம்" என்று கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெய்சங்கர், "கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் கூறினார்.
கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் பதற்றம் நிலவி வந்த நிலையில், அங்கு இரு தரப்பும் படைகளை குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், எட்டப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து சமீபத்தில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு தரப்பு துருப்புகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. மேலும், இரு நாட்டு ராணுவமும் இணைந்து இப்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT