Published : 19 Nov 2024 01:22 PM
Last Updated : 19 Nov 2024 01:22 PM

ஜி20 உச்சிமாநாடு - உறவை வலுப்படுத்த உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ரியோ டி ஜெனிரோ: ஜி20 மாநாட்டின் இடையே இத்தாலி, இந்தோனேசியா, நார்வே, போர்ச்சுகல், எகிப்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தனது இரண்டு நாள் நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17, 2024) பிரேசில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, திங்களன்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியைச் சந்தித்து, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

“ரியோ டி ஜெனிரோ ஜி 20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன. கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலகிற்கு பெரிதும் பங்களிக்கும்.” என்று மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மோடியை சந்திப்பதில் எப்போதுமே மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறிய மெலோனி, இந்த சந்திப்பை பேச்சுவார்த்தைக்கான “விலைமதிப்பற்ற வாய்ப்பு” என்று வர்ணித்துள்ளார். “இந்தியா-இத்தாலியின் மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கான எங்கள் பொதுவான உறுதிப்பாட்டை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்த கிடைத்த வாய்ப்பு இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் குடிமக்களின் நலனுக்காக இருதரப்பு கூட்டாண்மையை மேலும் ஆழமாக்குவதற்கு தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்ததாக மெலோனி கூறினார்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவை சந்தித்து, பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றில் உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். “பிரேசிலில் ஜி20 மாநாட்டின் போது அதிபர் பிரபோவோ சுபியான்டோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-இந்தோனேசிய தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்தது. வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம், மருந்துகள் மற்றும் பலவற்றில் உறவுகளை மேம்படுத்துவதில் எங்கள் பேச்சுக்கள் கவனம் செலுத்தியது” என்று மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோவுடனான சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார இணைப்புகளுக்கு மேலும் வீரியம் சேர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போர்ச்சுகல் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோவுடனான சந்திப்பு மிகச்சிறப்பாக இருந்தது. போர்ச்சுகல் உடனான நீண்ட கால உறவுகளை இந்தியா மதிக்கிறது. எங்கள் பேச்சுக்கள் நமது பொருளாதார இணைப்புகளுக்கு மேலும் வீரியத்தை சேர்ப்பதில் கவனம் செலுத்தியது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற துறைகள் ஒத்துழைப்புக்கான பல வாய்ப்புகளை வழங்குகின்றன. நாங்கள் வலுவான பாதுகாப்பு உறவு, மக்களக்கு இடையேயான தொடர்பு போன்ற பிற விஷயங்களைப் பற்றியும் பேசினோம்.” என்று தெரிவித்துள்ளார்.

உச்சிமாநாட்டின் இடையே நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரையும் மோடி சந்தித்தார். “பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. எங்களின் ஆர்க்டிக் கொள்கையானது இந்தியா - நார்வே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வழிவகுத்தது. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கிரீன் ஹைட்ரஜன் மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் நமது நாடுகளுக்கு இடையே முதலீட்டு இணைப்புகள் எவ்வாறு மேம்படலாம் என்பதைப் பற்றி பேசினோம். கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கீதா கோபிநாத் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ரியோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பசி மற்றும் வறுமையைக் குறைப்பதில் இந்தியாவின் பல வெற்றிகளை அவர் தெரிவித்தார். பல ஆக்கப்பூர்வமான முன்முயற்சிகளை உலகம் கற்றுக் கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கீதா கோபிநாத்தின் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, “உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் இந்தியா உறுதியுடன் உள்ளது. நாங்கள் எங்களின் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம். அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக எங்கள் கூட்டு வலிமை மற்றும் வளங்களைப் பயன்படுத்துவோம்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த மோடி, சிறிது நேரம் உரையாடினார். பிரேசில், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் உட்பட பல உலகத் தலைவர்களுடனும் மோடி உரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x