Published : 18 Nov 2024 06:53 PM
Last Updated : 18 Nov 2024 06:53 PM
கொழும்பு: இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இலங்கையில் அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் 21 கேபினெட் அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான இலாக்காங்களை அதிபர் அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். அதில், பாதுகாப்பு, நிதி, திட்டம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் தன் வசம் இருக்கும் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதம அமைச்சரான (பிரதமர்) ஹரினி அமரசூரியவுக்கு கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் விஜித ஹேரத்துக்கு வெளி விவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக ஹர்ஷன நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.டி.லால் காந்தவுக்கு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசனத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் அனுர கருணாதிலக்கவுக்கு, நகர்ப்புற வளர்ச்சி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு துறைகளும், அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கு மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள துறைகளும், அமைச்சர் உபாலி பன்னலகேவுக்கு, கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திக்கு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி துறைகளும், அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஹிந்தும சுனில் செனவிக்கு, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளும், அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு துறைகளும், அமைச்சர் சுனில் குமார் கமகேவுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி துறைகளும், அமைச்சர் கிரிஷாந்த அபேசேனவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளும், அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கு தொழிலாளர் துறையும், அமைச்சர் குமார் ஜெயக்கொடிக்கு எரிசக்தி துறையும், அமைச்சர் வைத்திய தம்மிக்க படபாண்டிக்கு சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT