Published : 18 Nov 2024 03:00 PM
Last Updated : 18 Nov 2024 03:00 PM
துபாய்: சவுதி அரேபியா இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சவுதியில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளை கவலையடைய செய்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கு போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு நஜ்ரானின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியான தகவலின்படி, 2024ல் இதுவரை 101 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆண்டுக்கு சராசரியாக 34 வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அரேபியா அறியப்படுகிறது. மேலும், 2024ல் இதுவரை சவுதி அரேபியா மொத்தமாக 274 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமனில் இருந்து 20 பேர், சிரியாவில் இருந்து 14 பேர், நைஜீரியாவில் இருந்து 10 பேர், எகிப்தில் இருந்து 9 பேர், ஜோர்டானில் இருந்து 8 பேர் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 7 பேர் அடங்குவர்.
சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா மூன்று பேரும், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவரும் இருந்தனர். மேலும் குறிப்பாக, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனைகள் இந்த ஆண்டு எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
ஒரு வருடத்தில் வெளிநாட்டினருக்கு அதிகப்படியான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இப்போதுதான் என்றும் சவுதி அரேபியா ஒரு வருடத்தில் 100 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு சவுதியில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. பெரும்பாலும், கொலை வழக்கு, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT