Published : 18 Nov 2024 01:44 AM
Last Updated : 18 Nov 2024 01:44 AM

கடந்த 3 மாதங்களாக உக்ரைன் மின் நிலையங்களை தாக்கும் ரஷ்யா

கீவ்: நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மற்றும் மின் பகிர்வு மையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் இந்த தாக்குதல் தொடர்வதால், தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிர்காலத்தில் மின் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். உக்ரைனுக்கு உளவியல் ரீதியான நெருக்கடியை அதிகரிப்பதற்காக ரஷ்யா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சர் ஜெர்மன் காளஸ்சென்கோ முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ உக்ரைனில் மின் நிலையங்களை குறிவைத்து மற்றொரு மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் முழுவதும் மின் உற்பத்தி மையம் மற்றும் மின் பகிர்வு மையங்களை ரஷ்யா குறிவைத்து தாக்குகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஷா கூறுகையில், ‘‘அமைதியான நகரங்கள், தூங்கும் மக்கள், முக்கிய கட்டமைப்புகள் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x