Published : 18 Nov 2024 01:25 AM
Last Updated : 18 Nov 2024 01:25 AM

ஐஸ்கிரீம், ஓட்டல், விமான பயணத்துக்கு பிரச்சாரத்தில் ரூ.101 கோடி செலவிட்ட கமலா ஹாரிஸ்

வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஐஸ்கிரீம், நட்சத்திர ஓட்டல், விமான பயணங்களுக்காக மட்டும் கமலா ஹாரிஸ் ரூ.101 கோடியை செலவிட்டு உள்ளார்.

கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். தற்போதைய துணை அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தோல்வியை தழுவினார்.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜனநாயக கட்சி சார்பில் ரூ.6,640 கோடி செலவிடப்பட்டது. இதில் ஐஸ்கிரீம், நட்சத்திர ஓட்டல், விமான பயணங்களுக்காக மட்டும் கமலா ஹாரிஸ் ரூ.101 கோடியை செலவிட்டு உள்ளார்.

கடந்த அக்டோபர் 1 முதல் 17 வரையிலான காலத்தில் மட்டும் விமான பயணத்துக்காக ரூ.18.58 கோடியை கமலா செலவு செய்துள்ளார். இதே காலத்தில் ஐஸ்கிரீமுக்காக ரூ.10 லட்சமும் உணவு வகைகளுக்காக ரூ.10 லட்சத்தையும் அவர் செலவு செய்திருக்கிறார்.

டெலவெயரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கமலாவும் அவரது ஆதரவாளர்களும் தங்க ரூ.53 லட்சம் கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இதேபோல பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்க பல லட்சம் ரூபாய் வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் சார்பில் சுமார் ரூ.3,000 கோடி செலவிடப்பட்டது. ஆனால் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் சார்பில் ரூ.6,640 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டது.

பல்வேறு தொழிலதிபர்கள், பிபரலங்கள் ஆளும் ஜனநாயக கட்சிக்கு தாராளமாக நன்கொடைகளை வழங்கினர். இதை கமலாவும் அவரது ஆதரவாளர்களும் வீணாக செலவு செய்தனர். ஆடம்பரம், அளவுக்கு அதிகமான செலவு ஆகியவை கமலாவின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தால் ஜனநாயக கட்சிக்கு ரூ.168 கோடி அளவுக்கு கடன் ஏற்பட்டிருக்கிறது. இந்த கடனை அடைக்க நன்கொடையாளர்களிடம் கையேந்தும் நிலைக்கு கட்சி தள்ளப்பட்டு உள்ளது. தேர்தல் பிரச்சார கடனை அடைக்க குறைந்தது 2 ஆண்டுகள் வரை ஆகலாம்.

பிரச்சாரத்துக்காக எந்தெந்த வகையில், எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து நன்கொடையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் இதற்கு கமலா தரப்பில் தெளிவான பதில் அளிக்க முடியவில்லை. பிரபலங்களின் ஆதரவை பெற பல கோடிகள் வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது. தேர்தலுக்குப் பிரகு இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x