Published : 18 Nov 2024 01:06 AM
Last Updated : 18 Nov 2024 01:06 AM
லண்டன்: டைட்டானிக் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு பரிசாக வழங்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டைட்டானிக் நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டதில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட கலைப்பொருள் என்ற பெருமையை இந்த பாக்கெட் கடிகாரம் பெற்றுள்ளது.
கடந்த 1912-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் திடீரென பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 2,200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் 1,500 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியிருந்த 705 பயணிகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை காப்பாற்றிய பெருமை கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானையே சாரும்.
ரோஸ்ட்ரான் காப்பாற்றியவர்களில் ஜான் பி தைய்யர், ஜான் ஜேக்கப் ஆஸ்டர் மற்றும் ஜார்ஜ் டி வைட்னர் ஆகிய மூன்று பெண்களும் அடங்குவர். அவர்கள், தங்களது உயிரை காப்பாற்றியதற்காக டிஃபனி அண்ட் கோ நிறுவனத்தின் 18 காரட் பாக்கெட் கடிகாரத்தை கேப்டன் ரோஸ்ட்ரானுக்கு பரிசாக வழங்கினர். தற்போது அந்த கடிகாரத்தைத் தான் இங்கிலாந்தின் விட்ஸையர் மாகாணத்தின் டிவிசஸ் நகரில் உள்ள ஹென்றி ஆல்டிரிட்ஜ் அண்ட் சன் நிறுவனம் ஏலத்துக்கு கொண்டு வந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட அமெரிக்கர் ஒருவர் ரூ.16 கோடிக்கு அதாவது 1.5 மில்லியன் பிரிட்டன் பவுண்டுக்கு அந்த கடிகாரத்தை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து ஹென்ஹி ஆல்டிரிஜ் நிறுவனம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் " இது மிகவும் அருமையான நாள். கேப்டன் ரோஸ்ட்ரானின் டிஃபனி பாக்கெட் கடிகாரம் இதுவரையில் இல்லாத அளவில் மிக அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ளது. டைட்டானிக் நினைவுச்சின்னங்களின் விற்பனையில் இந்த கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம் போய் புதிய உலக சாதனையை படைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT