Published : 17 Nov 2024 02:18 AM
Last Updated : 17 Nov 2024 02:18 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் என, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நிர்வாகி விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவரது பிரச்சார குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் எல்லாம் முக்கிய பதவிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். அமெரிக்க அரசு நிர்வாகத்தை மேம்படுத்த அரசு திறன் துறை உருவாக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இத்துறைக்கு பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க், இந்திய அமெரிக்கர் விவேக் ராமசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அரசு நிர்வாகத்தில் கொண்டுவரவுள்ள மாற்றங்கள் குறித்து விவேக் ராமசாமி கூறியதாவது: வாஷிங்டன் அரசு நிர்வாகத் தில் உள்ள பல லட்சம் பேரை அகற்றும் பணியை எலான் மஸ்க் மற்றும் நானும் தொடங்கவுள் ளோம். இதன் மூலம் நாங்கள் நாட்டை காப்பாற்றுவோம். அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள் அதிகளவில் இருந்தால், புதுமைகள் எதுவும் ஏற்படாது. செலவுதான் அதிகரிக்கும். அமெரிக்காவின் பல துறைகளில் நிலவும் உண்மையான பிரச்சினை இதுதான்.
கடந்த 4 ஆண்டுகளாக நாடு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து நாட்டை காக்க நாம் போராட வேண்டும். அமெரிக்க அரசியலில் கடந்த வாரம் நடந்த மாற்றம் மூலம், அமெரிக்காவில் மீண்டும் எழுச்சி தொடங்கவுள்ளது. அமெரிக்க மக்களுக்கு சிறந்த எதிர்காலமும், புதிய விடியலும் ஏற்படவுள்ளது. நமது குழந்தைகள் வளர்ச்சி அடைவர். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் சிறந்த நபர்களுக்கு வேறுபாடின்றி வேலை கிடைக்கும்.
அமெரிக்க திறன் துறையில் (டிஓஜிஇ) ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஒவ்வொரு வாரமும் அமெரிக்க மக்களுக்கு நேரடி ஒளிபரப்பு மூலம் தெரிவிப்போம். அமெரிக்க அரசின் அளவை ஒழுங்குபடுத்துவதுதான் எங்கள் இலக்கு. அரசு பணிகள் வெளிப்படையாக இருக்கும். புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப் எங்களுக்கு அளித்துள்ள பணியை எலான் மஸ்க்கும் நானும் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT