Published : 12 Nov 2024 04:56 AM
Last Updated : 12 Nov 2024 04:56 AM

பாலஸ்தீன மக்களை சித்ரவதை செய்த ஹமாஸ் தீவிரவாதிகள்: வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல் ராணுவம்

ஜெருசலேம்: பாலஸ்தீன மக்களை ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீன மக்களை பிடித்து வைத்து ஹமாஸ் அமைப்பினர் சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.இந்த வீடியோ 2018 முதல் 2020-ம்ஆண்டுக்குள் வடக்கு காசா பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கண்காணிப்புக் கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் இவை என்று தெரிவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தகவலை நியூயார்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் மீறல்: ஹமாஸ் அமைப்பினர் முன்பு தங்கியிருந்த ஜபாலியா என்ற பகுதியில் உள்ள முகாமில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மீறி பிடித்து வைத்த பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் சித்ரவதை செய்யும், அவர்கள் மிருகத்தனமாக நடந்துகொள்ளுதல் போன்றவை வீடியோவில் பதிவாகியுள்ளது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

47 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் முகாமின் கூரைப்பகுதியில் இருந்து சங்கிலியால் பொதுமக்கள் கை, கால்கள் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர். மேலும் ஹமாஸ் அமைப்பினர் தங்களது முகங்களை ்முகமூடியால் மூடிக்கொண்டு அவர்களிடம் கேள்வி எழுப்புவதும்,அடித்து துன்புறுத்துவதும்வீடியோவில் பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x