Published : 12 Nov 2024 12:59 AM
Last Updated : 12 Nov 2024 12:59 AM

ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்கள்: விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் செலவிட்ட கமலா ஹாரிஸ்

நியூயார்க்: அமெரிக்க தேர்தலில் ஆதரவாக பேச பிரபல டாக் ஷோ நடத்துநர் ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் டாலர்களை அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ் செலவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று வரும் ஜனவரியில் அதிபர் பொறுப்பில் அமரவுள்ளார்.

இந்நிலையில் தேர்தலின்போது விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ், 654 மில்லியன் டாலர்களை செலவு செய்ததாகவும், டொனால்ட் ட்ரம்ப் வெறும் 378 மில்லியன் டாலர்களை செலவு செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்இம்பாக்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவித்துள்ளது. கமலா ஹாரிஸை விட 57 சதவீதம் குறைவான தொகையை டொனால்ட் ட்ரம்ப் தேர்தலுக்காக செலவிட்டுள்ளார்.

மேலும், தனக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் புகழ் பெற்று விளங்கும் டாக் ஷோ நடத்துநரான ஓபரா வின்பிரேவுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை கமலா ஹாரிஸ் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இத்தகவலை வாஷிங்டன் எக்ஸாமினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸுக்காக ஓபரா வின்பிரே நடத்திய நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸை கட்டிப்பிடித்தும், முத்தமிட்டும் தனது மகிழ்ச்சியை ஓபரா வின்பிரே வெளிப்படுத்தினார். மேலும் கமலா ஹாரிஸின் வெற்றி பெறவேண்டும் என்று வின்பிரே புகழ்ந்து பேசியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஏராளமான தொகையை செலவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுவதும் கமலா ஹாரிஸ் நடத்தியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 2 கோடி அமெரிக்க டாலர்கள் செலவானதாகத் தெரிகிறது. பிரபல கலைஞர்கள் ஜான் பான் ஜோவி, கிறிஸ்டினா அகுய்லெரா, லேடி காகா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கோடிக்கணக்கான டாலர்கள் விளம்பரத்துக்காகவும் 2 கோடி அமெரிக்க டாலர்கள் டிஜிட்டல் மீடியா விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் வாஷிங்டன் எக்ஸாமினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x