Published : 26 Jun 2018 01:14 PM
Last Updated : 26 Jun 2018 01:14 PM
பாலியல் பலாத்காரம், கொத்தடிமையாக நடத்துதல், வல்லுறவு, கட்டாயத்திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதால், பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று மிகமோசமாக முதலிடத்தில் இருக்கிறது.
'தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்' எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து 550 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பு தொலைப்பேசி வாயிலாகவும், ஆன்லைன் மூலமும் கடந்த மார்ச் 26 முதல் மே 4-ம் தேதிவரை நடத்தப்பட்டது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, பசிபிக் பகுதிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு, ஆபத்தான நாடு இந்தியா என்று தெரியவந்துள்ளது. இதில் முதல் 10 இடங்களில் 9 இடங்களில் ஆசியாவில் உள்ள நாடுகளும், அமெரிக்காவும் இடம் பெற்றுள்ளன.
பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் பலாத்காரம், வீட்டுவேலைக்காகக் கடத்துதல், கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத்திருமணம், பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துதல் போன்றவற்றில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், கலாச்சாரம், பண்பாட்டு ரீதியாகவும் பெண்கள் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள், ஆசிட் வீச்சு, உடல்உறுப்புகளை சிதைத்தல், குழந்தை திருமணம், உடல்ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவைகளும் அதிகமாக நடக்கின்றன.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நகரம் என்ற பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது முதலாவது இடத்துக்குச் சென்றுள்ளது கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வில் ஆப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான், இந்தியா, சோமாலியா ஆகிய நாடுகள் பெண்களுக்கு மிக ஆபத்தான நாடுகள் என்ற பட்டியலில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்குது.
துப்பாக்கி குண்டுகளின் சத்தமும், வெடிகுண்டு வீச்சுகளும் நடக்கும் ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும், சிரியா 3-வது இடத்திலும் உள்ளன. அதைத் தொடர்ந்து 4-வது இடத்தில் சோமாலியாவும், 5-வது இடத்தில் சவுதி அரேபியாவும் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நாடாக இருக்கின்றன.
முதல் 10 நாடுகளில் ஒரே ஒரு மேற்கத்திய நாடாக அமெரிக்கா மட்டும் 10-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தாக்குதல்கள், வலுக்கட்டாயமாகப் பாலுறவு செய்தல் போன்றஅதிகமாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல்துன்புறுத்தல், பலாத்காரம் ஆகியவற்றைத் தடுக்க இந்திய அரசு போதுமான அளவில் கவனம் செலுத்தாதும், சட்டங்களை வலிமையான முறையில் அமல்படுத்தாததும் இந்தியாவின் நிலை பின்தங்கியதற்கு முக்கியக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவமாணவி ஓடும் பேருந்தில் பாலியல்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின்பும் கூடப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை, சட்டங்களை தீவிரப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக அரசு அதிகாரி மஞ்சுநாத் கங்காதரா ஆய்வு நடத்திய நிறுவனத்திடம் கூறுகையில், 'பெண்களுக்கு எந்தவிதமான மரியாதையும் இந்தியா அளிக்கவில்லை என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. பாலியல் பலாத்காரம், பாலியல் ரீதியான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்தல் போன்றவை இன்னும் குறையாமல் இருக்கின்றன.
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தும், விண்வெளி, தொழில்நுட்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டும், பெண்களுக்கு எதிரான வன்முறை குறையாமல் இருப்பது வெட்கக்கேடாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு இடையே பெண்களுக்கு எதிரான வன்முறை 83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் . ஒவ்வொரு நாளும் 100 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன, கடந்த 2016-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக 39 ஆயிரம் தாக்குதல்கள் நடந்துள்ளது. இது கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும் என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.
சமீபத்தில் காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது, உபியில் 16வயது சிறுமி பலாத்காரம் ஆகியவை உலக அளவில் இந்தியாவின் தோற்றத்தை சிதைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் மாதத்தில், காங்கிரஸ் சார்பில் ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிவரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்களுக்கு பாதுகாப்பு தேவை எனக்கோரி நடத்திய அமைதிப்போராட்டமும் குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு இந்தியா மிகுந்த ஆபத்தான நாடு என்ற இந்த ஆய்வறிக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பெரும் நெருக்கடியையும், அழுத்தத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும் நிலையில், இந்த ஆய்வு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் இதை கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டங்கள் போதுமான அளவில் இருந்தும் அதை மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக நடைமுறைப்படுத்தாததே இந்த அவலத்துக்குச் செல்ல காரணமாகும்.
12வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த ஆய்வு ஒட்டுமொத்த பலாத்காரத் குற்றத்துக்கும் அந்தத் தண்டனையை கொண்டுவர வேண்டும் என்ற தேவையை உருவாக்கியுள்ளது.
பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் முதல் 10 நாடுகள் பட்டியல்: 1. இந்தியா, 2.ஆப்கானிஸ்தான், 3. சிரியா, 4.சோமாலியா, 5.சவுதிஅரேபியா, 6. பாகிஸ்தான், 7. காங்கோ, 8. ஏமன், 9. நைஜிரியா, 10. அமெரிக்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT