Published : 09 Nov 2024 10:44 PM
Last Updated : 09 Nov 2024 10:44 PM
யெமஸ்ஸி: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீஸார் அந்த பணியை கவனித்து வருகின்றனர்.
ரீசஸ் மக்காக் (செம்முகக் குரங்கு) இன குரங்குகளை கொண்டு அங்குள்ள ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனம் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் அந்த ஆய்வகத்தில் உள்ள குரங்குகளின் 50 குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை திறந்தநிலையில் விட்டுள்ளார் அதன் பராமரிப்பாளர்.
அதை பயன்படுத்திக் கொண்டு 43 குரங்குகள் அங்கிருந்து தப்பியுள்ளன. 7 குரங்குகள் கூண்டிலேயே இருந்துள்ளன. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வர அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களுக்கு உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. வீடுகளில் கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை மூடி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
ஆய்வகத்தில் இருந்து தப்பிய குரங்குகள் அனைத்தும் பெண் இனத்தை சேர்ந்தவை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது அனைத்தும் 3.2 கிலோ எடை கொண்டது என்றும். அதனால் தப்பிய குரங்குகளை கொண்டு எந்தவித நோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, தெர்மல் கேமரா, கூண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி கடந்த புதன்கிழமை அன்று ஆய்வகத்தில் இருந்து தப்பிய குரங்குகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அமெரிக்க செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளனர்.
“தப்பிய குரங்குகள் ஆப்பிள்களை விரும்பி சாப்பிடும். அது இப்போது வெளியில் கிடைக்காது. முதலில் வெளியில் சென்ற குரங்கை பின் தொடர்ந்து மற்ற குரங்குகள் சென்று இருக்கக்கூடும். மழை காரணமாக குரங்குகளை பிடிப்பது கொஞ்சம் சவாலாக உள்ளது. ஆனால், தப்பிய குரங்குகள் அனைத்தையும் பிடிப்போம். இதனால் மக்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என ஆல்பா ஜெனிசிஸ் சிஇஓ கிரேக் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 2016-ல் 19 குரங்குகள், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 26 குரங்குகள் ஆய்வகத்தில் இருந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT