Published : 09 Nov 2024 08:10 AM
Last Updated : 09 Nov 2024 08:10 AM
வரும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று ட்விட்டர் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் கணித்துள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கு தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்த விவகாரம், அவருக்கு உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சியினரும் விலகுவதாக கூறி, ட்ரூடோவுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக அவர் தேர்வாகி இருக்கிறார். இந்தத் தேர்தலில் ட்ரம்ப் பிரச்சாரத்துக்கு எலான் மஸ்க் பெரியளவில் உதவினார். குறிப்பாகக் களத்தில் இறங்கியும் பிரச்சாரம் செய்தார். ட்ரம்ப்பின் வெற்றிக்கு எலான் மஸ்க்கும் முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே எலான் மஸ்க் இப்போது அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் அரசியல் குறித்து சில ஷாக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய்விடுவார் என்றும் தேர்தலில் தோல்வி அடைவார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அடுத்து நடைபெறவுள்ள கனடா நாட்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்" என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார். எஸ்க்கின் கூற்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT